Published : 03 Apr 2024 11:27 AM
Last Updated : 03 Apr 2024 11:27 AM
பெங்களூரு: பெங்களூரு ஊரக தொகுதியில் போட்டியிடும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷின் சொத்து மதிப்பு ரூ.254 கோடி அதிகரித்திருப்பது தேர்தல் பிரமாணப் பத்திரம் மூலம் தெரியவந்துள்ளது.
வருகிற மக்களவைத் தேர்தலில் பெங்களூரு ஊரக தொகுதியில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் 4ம் முறையாக காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் 27 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. ஆனால் டி.கே.சுரேஷ் மட்டும் மோடி அலையை மீறி, 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த முறை அவரை தோற்கடிக்க பாஜகவும், மஜதவும் கூட்டணி அமைத்து வியூகங்களை வகுத்துள்ளன. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன் மருத்துவர் மஞ்சுநாத் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள டி.கே.சுரேஷின் சொத்து மதிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்கள்வைத் தேர்தலின்போது டி.கே.சுரேஷ் தனக்கு ரூ. 338.87 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.593.04 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு 75 சதவீதம் அதிகரித்து, ரூ. 254.17 கோடி ஆக உயர்ந்துள்ளது.
டி.கே.சுரேஷ் பெயரில் ரூ.210.47 கோடி மதிப்பிலான நிலமும், ரூ.211.91 கோடி மதிப்பிலான வணிக கட்டிடங்களும் இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு ரூ.51 கோடியாக இருந்த முதலீடு, பங்கு, பத்திரம் ஆகியவற்றின் மதிப்பு 188 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ.150.05 கோடியாக உள்ளது.
அண்ணனைவிட குறைவு தான்: டி.கே.சுரேஷின் அண்ணன் டி.கே.சிவகுமார் நாட்டிலே பணக்கார எம்எல்ஏக்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு ரூ.1,413 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT