Published : 03 Apr 2024 10:31 AM
Last Updated : 03 Apr 2024 10:31 AM
பெங்களூரு/பனாஜி: பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பெண் சிஇஓ தன் 4 வயது மகனை விஷம் கொடுத்து கொலை செய்யவில்லை; கழுத்தை நெறித்தே கொலை செய்திருக்கிறார் என கோவா போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த சுச்சானா சேத் (39) பெங்களூருவில் The Mindful AI Lab என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார். தனது கணவர் வெங்கட்ராமனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்த இவர், கடந்த ஜனவரியில் தன் 4 வயது மகனுடன் கோவா சென்றார். அங்கு மகனை கொன்று சூட்கேஸில் உடலை பெங்களூருவுக்கு கொண்டுசெல்லும் போது, போலீஸாரிடம் சிக்கினார்.
இதையடுத்து கோவா போலீஸார் சுச்சானா சேத் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 302, 201 மற்றும் கோவா குழந்தைகள் பாதுகாப்பு சட்ட பிரிவு 8 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
642 பக்க குற்றப்பத்திரிக்கை: இவ்வழக்கில் கோவா போலீஸார் நேற்று முன் தினம் பனாஜியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு நீதிமன்றத்தில், 59 சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் 642 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். அதில், ''4 வயது மகன் விஷம் கொடுத்து கொல்லப்படவில்லை. கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் சுவாச மூச்சுத்திணறல் காரணமாக இறந்துள்ளார். பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுச்சானா சேத் கூர்மையான அறிவுள்ளவர். அவர் விசாரணையை திசைத்திருப்பும் வகையில் செயல்பட்டுள்ளார். அவருக்கும் அவரது கணவர் வெங்கட்ராமனுக்கும் இடையேயான விவகாரத்து வழக்கில் பின்னடைவை சந்தித்துள்ளார். தன் மகனை தந்தைக்கு காட்டுவதை பிடிக்காமல், அவரை கொலை செய்துள்ளார்.
டிஷ்யூவில் எழுதிய கடிதம்: சுச்சானா சேத் தங்கியிருந்த விடுதியில் சிக்கிய டிஷ்யூ காகிதத்தில், ''எனது 4 வயது மகனை என்னிடம் (வெங்கட்ராமன்) அனுப்பாவிட்டால் உன்னை சிறைக்கு அனுப்புவேன் என எனது முன்னாள் கணவரும், குடும்ப நீதிமன்ற நீதிபதியும் மிரட்டுகின்றனர். எனது மகனை என்னால் பாதுகாக்க முடியவில்லை. அதற்கான வழியை எனது வழக்கறிஞராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என எழுதியுள்ளார் என போலீஸார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில், பெற்ற தாய் 4 மகனை கழுத்தை நெறித்து கொன்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT