Published : 03 Apr 2024 08:01 AM
Last Updated : 03 Apr 2024 08:01 AM
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்தஎன்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது. எனவே இந்த மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், துணை ராணுவப் படையினர், போலீஸார் அடிக்கடி ரோந்துசுற்றி வருவர்.
இந்நிலையில்,இப்பகுதியிலுள்ள கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெந்த்ரா கிராமத்துக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று காலை 6 மணியளவில் பாதுகாப்புப் படையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் நக்சலைட்டுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
நீண்ட நேரமாக நடந்த இந்தத் துப்பாக்கி சண்டையின் முடிவில் 8 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழந்தனர். 2 இடங்களில் இருந்து தலா 4 மாவோயிஸ்ட்களின் உடல்களை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி, ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.
மேலும் அப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி உள்ளனரா என்று அறிய பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிஜாப்பூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினருடனான என்கவுன்ட்டர்களில் இந்த ஆண்டில் இதுவரை 41 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழந்துள்ளனர் என்று மாவட்ட போலீஸ் ஐ.ஜி. பி. சுந்தர்ராஜ் (பஸ்தார் பிரிவு) தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT