Published : 02 Apr 2024 06:58 AM
Last Updated : 02 Apr 2024 06:58 AM

ஜெகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தாமதம் ஏன்? - சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

ஜெகன் மோகன் ரெட்டி

அமராவதி: ஆந்திர மாநில முதல்வரான ஜெகன் மோகன் மீது சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. மொத்தம் 16 வழக்குகளில் ஜெகன் குற்றம் சாட்டப்பட்டவராக உள்ளார். இதில் பல வழக்குகளில் அவர் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக (ஏ-1) உள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்குகளில் ஏற்கெனவே அவர் 16 மாதங்கள் ஹைதராபாத் சஞ்சல் கூடா சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெகன் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்த இவர், 2014-ல் பேரவைத் தேர்தலை சந்தித்தார். இதில் இவரது கட்சி 67 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பெரும்பான்மை இடங்களை வென்ற தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தது. இதனை தொடர்ந்து ஜெகன் எதிர்க்கட்சி தலைவரானார்.

அதன் பின்னர் சுமார் 3 ஆயிரம் கி.மீ வரை ஆந்திராவில் பாதயாத்திரை மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். இந்நிலையில், கடந்த 2019-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

25 மக்களவை தொகுதிகளில் 23 தொகுதிகளில் ஜெகன் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து ஜெகனின் சொத்து குவிப்பு வழக்கு ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் அடிக்கடி இவ்வழக்கில் ஆஜராக ஹைதராபாத் சென்று வருவது முதல்வராக இருக்கும் தமக்கு சிரமாக இருப்பதாக கூறி தொடர்ந்து இவ்வழக்குகளில் முதல்வர் ஜெகன், ஜாமீன் பெற்று வருகிறார்.

இந்நிலையில், இவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமெனவும், முதல்வராக இருக்கும் ஜெகன் தரப்பினர் சாட்சிகளை மிரட்டி வருகிறார்கள் எனவும் இவரது கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்பியான ரகுராம கிருஷ்ணம்ம ராஜு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திவாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.

சிபிஐ தரப்பில் எஸ்.வி. ராஜு ஆஜரானார். அப்போது, ஜெகன் சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை ஏன் தாமதமாகிறது ? இதற்கு என்ன காரணம் ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு சிபிஐ தரப்பில் எஸ்.வி ராஜு பதிலளிக்கையில், ‘டிஸ்சார்ஜ் பெட்டிஷன்’ காரணமாக வழக்கு தாமதமாக நடக்கிறது என பதிலளித்தார். இதற்கு, அரசியல் காரணமாக ஒரு வழக்கை தாமதமாக நடத்தகூடாது.

குற்றத்தை எதிர்கொள்பவர் ஒரு அரசியல்வாதி என்றோ, அல்லது ஒரு முதல்வர் என்றோ வழக்கை தள்ளி போட்டுக்கொண்டே இருக்க கூடாது. ஜாமீன் ரத்து, ஆந்திராவில் இருந்து ஹைதராபாத்துக்கு வழக்கு மாற்றப்பட்ட விவகாரம் போன்ற அனைத்தையும் இவ்வழக்கிலேயே விசாரணை நடத்துவோம்.

இதுவரை இவ்வழக்கில் தாமதம் ஏன்? என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். இவ் வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x