Published : 29 Apr 2018 08:35 AM
Last Updated : 29 Apr 2018 08:35 AM

திருப்பதி கோயில் உண்டியல் பணத்தை தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்தது குறித்து விசாரணை: அறங்காவலர் குழு தலைவர் தகவல்

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஓராண்டுக்குப் பிறகு ஆந்திர அரசால் நியமனம் செய்யப்பட்டது. இதில் அறங்காவலர் குழு தலைவராக கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த புட்டா சுதாகர் யாதவ் நியமிக்கப்பட்டார்.

இக்குழுவில், வேற்று மதத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்எல்ஏ அனிதாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து குழுவிலிருந்து விலகுவதாக அனிதா கூறினார். இந்நிலையில், புட்டா சுதாகர் யாதவ் தலைமையிலான புதிய அறங்காவலர் குழுவில் இடம்பெற்றிருந்த 14 பேரில் 12 பேர் ஏழுமலையான் கோயிலில் நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர், புட்டா சுதாகர் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஏழுமலையானுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு அளித்த ஆந்திர முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, யாதவ குலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அறங்காவலர் குழு தலைவர் பதவி முதன்முறையாக வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பெருமை முதல்வர் சந்திரபாபு நாயுடுவையே சாரும். பரம்பரை யாதவர் பிரச்சினை, தற்காலிக ஊழியர் பிரச்சினை மற்றும் பக்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாடுபடுவேன்” என்றார்.

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை பணம், நிபந்தனைகளை மீறி, தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்தது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? பக்தர்கள் காணிக்கை பணம் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு “பக்தர்களின் உண்டியல் பணம் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்தது குறித்து அறங்காவலர் குழுவில் விவாதித்து, உரிய விசாரணை நடத்தப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x