Published : 01 Apr 2024 07:28 PM
Last Updated : 01 Apr 2024 07:28 PM
புதுடெல்லி: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் - ஜூன் மாதங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து திங்கள்கிழமை இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், “நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் - ஜூன் மாதங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. வெப்ப அலைகளால் மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப பகுதிகள் மோசமாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், மேற்கு இமயமலைப் பகுதி, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வடக்கு ஒடிசாவின் சில பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் 10 முதல் 20 நாட்கள் வரை வெப்ப அலை வீடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது நான்கு முதல் எட்டு நாட்கள் வரை இருக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் குஜராத், மத்திய மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா, வடக்கு சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வெப்ப அலைகளின் மோசமான தாக்கத்தை சந்திக்க நேரிடும். மத்திய தென்னிந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது குறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “இது நாம் அனைவருக்கும் மிகவும் சவாலானதாக இருக்கும். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதாலும், தீவிர வானிலை நிலைமைகளை எதிர்கொள்வதாலும், இந்தியா முன்கூட்டியே தயார் நிலையில் இருக்க வேண்டியது முற்றிலும் அவசியம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT