Published : 01 Apr 2024 04:05 PM
Last Updated : 01 Apr 2024 04:05 PM
புதுடெல்லி: கச்சத்தீவு விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சரமாரியாகக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார், மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
இது தொடர்பாக ப,சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “பழிக்குப் பழி எல்லாம் பழங்கதை. ட்வீட்டுக்கு ட்வீட் தான் புதிய ரக ஆயுதம். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 27.1.2015 தேதியிடப்பட்ட ஆர்டிஐ மனுவை திரும்பப் பார்க்குமாறு வேண்டுகிறேன்.அந்தத் தேதியில் அவர் தான் நம் நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருந்தார் என நினைக்கிறேன். அந்த ஆர்டிஐ பதிலில், இலங்கையிடம் கச்சத்தீவை இந்தியா வழங்கியதற்கான சூழலை நியாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இப்போது ஏன் வெளியுறவு அமைச்சகமும் அமைச்சரும் அந்தர் பல்டி அடிக்கின்றனர் எனத் தெரியவில்லை.
எப்படி மனிதர்களால் இவ்வளவு வேகமாக நிறம் மாறிக்கொள்ள முடிகிறது? ஒரு சாதுவான, தாராள சிந்தனை கொண்டவராக இருந்தவர் ஒரு புத்திசாலித்தனமான வெளியுறவு அமைச்சராக, ஆர்எஸ்எஸ் - பாஜகவின் ஆதரவாளராக மாறியிருக்கிறார். ஜெய்சங்கரின் காலமும் வாழ்க்கையும் வரலாற்றில் பதிவு செய்யப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொரு ட்வீட்டில், “கடந்த 50 ஆண்டுகளாக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மையே. அதேபோல் இந்தியாவும் நிறைய இலங்கை மீனவர்களை சிறைப்பிடித்துள்ளது. இங்கிருந்த ஒவ்வொரு அரசாங்கமும் இலங்கை அரசுடன் சமரசப் பேச்சுவார்த்தை பேசி அவ்வப்போது நமது மீனவர்களை மீட்டும் உள்ளது. இது ஜெய்சங்கர் வெளியுறவு அதிகாரியாக இருந்தபோதும் நடந்துள்ளது. அவர் வெளியுறவு அமைச்சராக இருந்தபோதும் நடந்துள்ளது.
ஆனால் இப்போது மட்டும் காங்கிரஸ், திமுகவுக்கு எதிராக ஜெய்சங்கர் பேச என்ன மாறிவிட்டது? வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், பாஜக ஆட்சியில் இருந்தபோதும் அது பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும் நடந்துள்ளது. 2014-ல் மோடி பிரதமரான பின்னர் இலங்கையால் மீனவர்கள் கைது செய்யப்படவே இல்லையா?” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற ஆர்டிஐ தகவலால் இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி வருகிறது. பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் திமுகவின் ‘இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது’ என்று கூறி விமர்சித்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரம் தொடர்பாக இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கச்சத்தீவு பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்வது முக்கியம். இந்த பிரச்சினை நீண்ட காலமாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு விவகாரம் கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. உண்மையில், தமிழக முதல்வர் எனக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் 21 முறை கச்சத்தீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன். இது திடீரென எழுந்த பிரச்சினை அல்ல. பல ஆண்டுகளாக உள்ள இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நேரடி பிரச்சினை.
கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது மாநில அரசிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று திமுக கூறுவதை ஏற்க முடியாது. இந்தியாவின் நிலப்பரப்பில் அப்போதைய மத்திய அரசும், பிரதமர்களும் காட்டிய அலட்சியமே இது மாதிரியான பிரச்சினைகள் தொடர்ந்து எழக் காரணம். முன்னாள் பிரதமர்கள் யாரும் கச்சத்தீவு பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் உண்மை” எனக் கூறியிருந்தார். நேரு, இந்திரா காந்தியை தன் உரையில் அவர் சாடியிருந்தார். இந்நிலையில்தான் ப.சிதம்பரம் இந்த ட்வீட்களைப் பதிவு செய்துள்ளார்.
ஏற்கெனவே பிரதமரின் ட்வீட்டுக்கும் அவர் பதில் ட்வீட் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், "1974-ம் ஆண்டில் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்?. கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி்.மீ.. அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி" என்று பதிவிட்டிருந்தார்.
இதனிடையே, “கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி என்ன செய்து கொண்டிருந்தார்? இவ்வளவு காலம் அமைதி காத்தது ஏன்? தமிழகத்தில் பாஜக தோல்வி முகம் காண்பதால் இப்படிப் பேசுகிறார்” என்று காங்கிரஸ் சாடியிருந்தது.
அதேவேளையில், “திமுக அரசின் கடும் எதிர்ப்பை மீறியே கசசத்தீவு (1974, 1976 ஒப்பந்தங்கள்) இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள். பத்து ஆண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் சாடியிருந்தார்.
முன்னதாக, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார். அந்த ஆவணங்களில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் > கச்சத்தீவு: ‘ஆர்டிஐ’ ஆவணங்கள் சொல்வது என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT