Published : 01 Apr 2024 05:03 AM
Last Updated : 01 Apr 2024 05:03 AM

முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது: இல்லத்துக்கு சென்று வழங்கினார் குடியரசுத் தலைவர் முர்மு

புதுடெல்லி: முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு நேற்று ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவரது இல்லத்துக்கு சென்று விருதை நேரில் வழங்கினார்.

மறைந்த பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு கடந்த ஜனவரி 23-ம் தேதியும், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு கடந்த பிப்ரவரி 3-ம் தேதியும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு கடந்த பிப்ரவரி 9-ம் தேதி பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன. மறைந்த தலைவர்கள் கர்ப்பூரி தாக்குர், சவுத்ரி சரண் சிங், நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதன் சார்பில் அவர்களது குடும்பத்தினர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். வயதுமுதுமை, உடல்நலக் குறைவு காரணமாக அத்வானி மட்டும் விழாவில்கலந்து கொள்ளவில்லை.

இந்த சூழலில் டெல்லி லோதிஎஸ்டேட், பிரித்விராஜ் சாலையில்உள்ள அத்வானியின் இல்லத்துக்குகுடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று சென்று, அத்வானிக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அத்வானியின் அரசியல் பயணம்: கடந்த 1927-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் எல்.கே.அத்வானி பிறந்தார். கடந்த 1942-ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது கடந்த 1947-ம் ஆண்டில் அத்வானியின் குடும்பம் டெல்லியில் குடியேறியது. கடந்த1958-63-ம் ஆண்டில் டெல்லி மாநில ஜன சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்தார்.

கடந்த 1965-ம் ஆண்டில் கமலாவை திருமணம் செய்தார். அத்வானி - கமலா தம்பதிக்கு பிரதிபா என்ற மகளும், ஜெயந்த் என்ற மகனும் பிறந்தனர்.

கடந்த 1972-ம் ஆண்டில் பாரதிய ஜன சங்கத்தின் தலைவரானார். கடந்த 1980-86-ம் ஆண்டில் பாஜகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். 1986, 1988-ம்ஆண்டுகளில் பாஜகவின் தலைவராக பணியாற்றினார்.

கடந்த 1990-ம் ஆண்டில் குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு ரத யாத்திரை மேற்கொண்டார். 2002 முதல் 2004-ம்ஆண்டு வரை நாட்டின் துணை பிரதமராக பதவி வகித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x