Published : 01 Apr 2024 07:04 AM
Last Updated : 01 Apr 2024 07:04 AM

முதல் 10 பணக்கார எம்.பி.க்களில் 4 பேருடன் ஆந்திரா முதலிடம்

கோப்புப்படம்

விசாகப்பட்டினம்: நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவை எம்.பி.க்களின் சொத்து, அவர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்த ஆய்வறிக்கையை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மக்களவை எம்.பி.க்களில் அதிக சொத்து வைத்திருக்கும் முதல் 10 பேரில் 4 பேருடன் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. நரசாபுரம் தொகுதி எம்.பி. ரகு ராம கிருஷ்ணம் ராஜு ரூ.325 கோடி சொத்துடன் 3-ம் இடத்தில் உள்ளார். குண்டூர் எம்.பி. கல்லா ஜெயதேவ் ரூ.305 கோடி சொத்துடன் 4-ம் இடத்திலும், நெல்லூர் எம்.பி. அடலா பிரபாகர ரெட்டி ரூ.221 கோடி சொத்துடன் 7-ம் இடத்திலும், விசாகப்பட்டினம் எம்.பி. எம்விவி சத்யநாராயணா ரூ.203 கோடி சொத்துடன் 10-ம் இடத்திலும் உள்ளனர். ஆந்திர எம்.பி.க்கள் 11 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஒட்டுமொத்தமாக 514 எம்.பி.க்களின் விவரங்களை ஆய்வு செய்ததில் 225 பேர் (44%) மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. 159 பேர் (29%) மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. நாட்டிலேயே அதிக அளவாக கேரளாவைச் சேர்ந்த எம்.பி.க்களில் 85% பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பிஹார் எம்.பி.க்களில் 78% பேர் மீது குற்ற வழக்குகளும் 55% பேர் மீது தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன. இமாச்சல பிரதேசம் (75%, 50%), மேற்கு வங்கம் (58%, 40%), மகாராஷ்டிரா (54%, 28%) உத்தர பிரதேசம் (54%, 43%) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.122 (24%) எம்.பி.க்கள் 5 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். 375 (73%) எம்.பி.க்கள் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படித்தவர்களாக உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x