Published : 31 Mar 2024 04:31 PM
Last Updated : 31 Mar 2024 04:31 PM
புதுடெல்லி: காங்கிரஸ் அரசு அநாவசியமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு, "இது தேர்தல் வேளையில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்சாரம் என்று காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. மேலும் கடந்த பத்து ஆண்டுகளில பாஜக தலைமையிலான அரசின் பணிகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்தீப் திக்ஷித் கூறுகையில், “நமது பிரதமரின் பிரச்சினையே அவர் எந்தவிதமான ஆதாரங்களும் இன்றி அறிக்கைகள் வெளியிடுகிறார். அவர் குறிப்பிடுவது போல் ஏதாவது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது என்னவென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இரண்டாவதாக, கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார். ஏன் அவர் இவ்வளவு காலமும் அமைதியாக இருந்தார். இவையெல்லாம் தேர்தெடுக்கப்பட்ட போலியான பிரச்சாரங்களாகும். தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு பாஜக படுமோசமாக தோல்வியடையும் என அனைக்து கருத்துகணிப்புகளும் கூறுவதால் பிரதமர் இப்படி பேசுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கருத்து குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “முதலில் சீன எல்லையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பிரதமர் மோடியிடம் கேட்க வேண்டும். அருணாச்சலப் பிரதேசம், லடாக்கில் எவ்வளவு சதுர கிலோ மீட்டரை சீனா கைப்பற்றியுள்ளது? இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூற வேண்டும். இந்தப் பத்தாண்டுகளில் அவரது அரசு என்ன செய்தது என்று பிரதமர் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
கச்சத்தீவு விவகாரம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி எப்போதும் நாட்டை பிரித்து ஆட்சி செய்து துண்டாக்கும் அரசியலிலேயே நம்பிக்கை கொண்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிவந்துள்ள இத்தகைய ஆதாரங்கள், கடந்த 1974-ல் காங்கிரஸ் குடும்பத்தின் முதல் ஆட்சியில் அது நேருவோ அல்லது இந்திரா காந்தியோ கச்சத்தீவினை சந்தோஷமாக ஒரு தட்டில் வைத்து தாரைவார்த்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.
எவ்வாறாயினும் சட்டம், வரலாற்று ஆதாரங்கள் நமக்கு சாதமாக உள்ளன. அவை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவை காங்கிரஸ் கட்சி இந்தியாவை நூறு துண்டுகளாக உடைத்திருப்பதை காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலையில் கச்சத்தீவு விவகாரம் குறித்து, "கடந்த 1970 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு அநாவசியமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது” என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். மேலும், காங்கிரஸை நம்பகத்தன்மை அற்ற கட்சி என்று கடுமையாக விமர்சித்திருந்தார். முழுமையாக அறிய > “கச்சத்தீவை இலங்கைக்கு அநாவசியமாக தாரைவார்த்தது காங்கிரஸ்” - பிரதமர் மோடி தாக்கு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT