Published : 31 Mar 2024 03:53 PM
Last Updated : 31 Mar 2024 03:53 PM
புதுடெல்லி: “400 சீட்களில் வெற்றி என்ற முழக்கமெல்லாம் சூதாட்டம் (மேட்ச் ஃபிக்ஸிங்) இல்லாமல் சாத்தியப்படாது” என்று ஆளும் பாஜகவின் தேர்தல் முழக்கத்தை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று (ஞாயிறுக்கிழமை) இண்டியா கூட்டணிக் கட்சியினர் சார்பில் மெகா பேரணி நடைபெற்றது.
இதில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “பாஜக இத்தேர்தலில் 400 எம்.பி.,க்களுடன் நாடாளுமன்றத்தில் அமர்வோம் என்று முழங்குகிறது. இந்த முழக்கம் மேட்ச் ஃபிக்ஸிங் செய்தால் மட்டுமே சாத்தியமாகும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சமூக வலைதளம், மேட்ச் ஃபிக்ஸிங், ஊடகத்தின் மீதான அழுத்தம் ஆகியன இல்லாமல் பாஜகவால் 180 சீட்கள் கூட பெறமுடியாது.
ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் அம்பயர்களுக்கு அழுத்தம் ஏற்படும்போது விளையாட்டு வீரர்கள் விலைபோகின்றனர். கேப்டன்கள் மிரட்டப்படுகிறார்கள். நம் முன்னால் இப்போது மக்களவைத் தேர்தல் உள்ளது. இதில் அம்பயர்களை பிரதமர் மோடி தேர்வு செய்கிறார். நம் அணியின் இரண்டு வீரர்களை ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் மிகப்பெரிய எதிர்க்கட்சி. ஆனால் எங்களின் அனைத்து கணக்குகளும் தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் முடக்கியுள்ளனர். இது எந்த மாதிரியான தேர்தல் எனத் தெரியவில்லை.
பிரதமர் மோடி இந்த நாட்டின் சில தொழிலதிபர்களுக்காக தேர்தல் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அரசமைப்பை ஏழைகளிடமிருந்து பறிக்கிறார்.
இந்தத் தேர்தல் சாதாரணமானது அல்ல. இது தேசத்தை, அரசமைப்பைக் காப்பாற்றுவதற்கான தேர்தல். இதில் நீங்கள் முழு சக்தியுடன் வாக்களிக்காவிட்டால், அவர்களின் மேட்ச் ஃபிக்ஸிங் வென்றுவிடும். அது வெற்றி பெற்றுவிட்டால் அரசமைப்பு சிதைக்கப்படும். அது நடக்கும் நாள் தான் நம் நாடும் முடிவைக் காணும் நாள். பாஜக எம்.பி. ஒருவர் எங்களுக்கு 400 எம்.பி.க்கள் கிடைக்கும் நாளில் அரசமைப்பு மாற்றப்படும் என்றார். அவர் சொன்னது வெறும் வார்த்தைகள் அல்ல. ஒரு கருத்தை திணிப்பதற்கு முந்தைய வெள்ளோட்டம்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT