Published : 31 Mar 2024 02:41 PM
Last Updated : 31 Mar 2024 02:41 PM

“ஜனநாயகத்தைக் காப்பாற்ற அல்ல, ஊழலை மறைக்கவே பேரணி” - பாஜக குற்றச்சாட்டு

பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திவேதிரி

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் மெகா பேரணியை கடுமையாக சாடியுள்ள பாஜக, “இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான பேரணி இல்லை. குடும்பத்தை காப்பாற்றவும், ஊழலை மறைக்கவும் நடக்கும் பேரணி" என்று குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி, காங்கிரஸ், திமுக, மற்றும் ஆர்ஜேடி உள்ளிட்டக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் ஊழல் வழக்குகளை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் கூறுகையில், “டெல்லி ராம் லீலா மைதானத்தில் முன்பு அன்னா ஹசரே தலைமையில் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற இயக்கம் நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்கு ஊழலில் ஈடுபட்ட அனைவரும் ஒன்றிணைந்து உள்ளனர்.

பல தலைவர்களை திருடர்கள், வஞ்சகர்கள் என்று ஒதுக்கிய ஆம் ஆத்மி கட்சி இன்று அவர்களுடனேயே கை கோர்த்துள்ளது விசித்திரமான மற்றும் திகைக்க வைக்கும் காட்சியாக உள்ளது. ஊழல் வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட லாலு பிரசாத் இப்போது அவர்களின் தலைவர்.

அவர்கள் அனைவரும் தங்களின் பழைய பாவங்களை மறைக்கவே இங்கே ஒன்று கூடியுள்ளனர். அவர்கள் ராமர் கோயில் கட்டுவதற்கு எதிராக இருந்தனர் என்பதையும், அவர்களில் சில தலைவர்கள் இந்து மதத்தை அழிக்க அழைப்பு விடுத்தனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அரசியல் கட்சிகள் இந்திய அரசியலில் நம்பிக்கையில்லாத தன்மையினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அதேசமயம் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, நம்பகத்தன்மையின் அரசியலையும், வாக்குறுதிகளை நிறைவற்றியதற்கான சாதனைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக ஒன்று கூடியிருப்பதாக கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் வாரிசு அரசியலின் அமைப்பாகவே உள்ளனர். அது மற்றவர்களை ஒரு போதும் உயர அனுமதிக்காது. மக்கள் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி, ஞாயிற்றுக்கிழமை டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணியை நடத்துகின்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x