Published : 31 Mar 2024 04:56 AM
Last Updated : 31 Mar 2024 04:56 AM

தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட 5 பேருக்கு பாரத ரத்னா விருது

மறைந்த தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கான பாரத ரத்னா விருதை மகள் நித்யா ராவ், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றார்.படம்: பிடிஐ

புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் மறைந்த நரசிம்ம ராவ், சரண்சிங் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று கவுரவித்தார்.

நாட்டிலேயே மிக உயரிய விருதாகக் கருதப்படும் பாரத ரத்னா விருதுகளை வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் மறைந்த நரசிம்ம ராவ், சரண்சிங், உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். நரசிம்ம ராவ் சார்பாக அவரது மகன் பி.வி.பிரபாகர் ராவ் பெற்றுக்கொண்டார். சரண்சிங் சார்பாக அவரது பேரன் ஜெயந்தன்சிங் பெற்றுக்கொண்டார்.

பசுமை புரட்சியின் தந்தை என போற்றப்படும் மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கான விருதை அவர் சார்பாக அவரது மகள் நித்யாராவ் பெற்றுக்கொண்டார். பிஹார் முன்னாள் முதல்வரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் உரிமை போராளியுமான மறைந்த கர்பூரி தாக்கூருக்கு வழங்கப்பட்ட விருதை அவரது மகன் ராம்நாத் தாக்கூர் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து ஜே.டி.யு. கட்சித் தலைவர் ராம்நாத் தாக்கூர் கூறியதாவது:

எனது தந்தையின் மகத்தான சமூக அரசியல் பங்களிப்புக்கு இந்திய அரசு மதிப்பளித்திருப்பதை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் உயரிய விருதை அளித்து கவுரவித்தமைக்காக தேசத்தின் சார்பாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி உட்பட ஐவருக்கு இந்த ஆண்டுக்கான பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எல்.கே.அத்வானி உடல்நலக் குறைவால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆகவே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று அவரது இல்லம் தேடி சென்று, அவருக்கு பாரத ரத்னா விருதை அளித்து கவுரவிப்பார்.

இவ்விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப்தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x