Published : 30 Mar 2024 05:05 AM
Last Updated : 30 Mar 2024 05:05 AM
புதுடெல்லி / பெங்களூரு: காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில நீர்ப்பாசனத் துறை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அப்போது தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி காவிரி நீரை திறந்து விட உத்தரவிடப்பட்டது. தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகேதாட்டு அணை திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. “கர்நாடக அரசு தாக்கல் செய்த மேகேதாட்டு திட்ட வரைவு அறிக்கை மத்திய நீர் ஆணையத்தின் ஆலோசனைக்காக அனுப்பப்படுகிறது.
அந்த ஆணையத்தின் முடிவின்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தெரிவித்தார்.
இந்நிலையில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் வரும் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் நீர்ப்பாசனத் துறை உறுப்பினர்களுக்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அழைப்பு விடுத்துள்ளார்.
விரிவான விவாதம்: இந்தக் கூட்டத்தில் நதிநீர் பங்கீடு, நிலுவை நீர் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும். அதே வேளையில் கர்நாடக அரசு மேகேதாட்டு திட்டம் குறித்து விரிவாக விவாதிக்க முடிவெடுத்துள்ளது. மேலும் மத்திய நீர் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கை மீது எத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது? அணை கட்டுவதற்கான அனுமதி எப்போது வழங்கப்படும் என கேட்க இருப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT