Published : 30 Mar 2024 05:24 AM
Last Updated : 30 Mar 2024 05:24 AM
புதுடெல்லி: அசதுத்தீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தஹாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சி உத்தரபிரதேசத்தை அடுத்து, முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள கிழக்கு பிஹாரிலும் போட்டியிடுகிறது.
கிழக்கு பிஹாரில் அரரியா, கிஷண்கஞ்ச், கத்தியார், பூர்ணியா, முசாபர்பூர், கோபால்கஞ்ச், ஷிவ்ஹர், தர்பங்கா, பாடலிபுத்ரா, பக்ஸர், கராகட், பாகல்பூர், உஜியர்பூர் ஆகிய 13 தொகுதிகளுக்கு இக்கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மதுபனி, சீதாமடி ஆகிய 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது.
இவை தவிர சிவானில் சுயேச்சையாகப் போட்டியிடும் ஹென்னா சாஹேப் என்ற முஸ்லிம் பெண்ணுக்கு ஏஐஎம்ஐஎம் ஆதரவளிக்கிறது. இவர், மறைந்த சையது சஹாபுத்தீனின் மனைவி ஆவார். குற்றப்பின்னணி அரசியல்வாதியான சஹாபுத்தீன், லாலுவுக்கு நெருக்கமானவர். ஆர்ஜேடி கட்சி சார்பில் 2 முறை எம்எல்ஏவாகவும், 5 முறை எம்.பி.யாகவும் இருந்த இவர் 2021-ல் மறைந்தார்.
ஒவைசி கட்சி போட்டியிடும் 15 தொகுதிகளில் பாஜக கூட்டணியும் போட்டியிடுகிறது. அதாவது இந்த 15-ல் 9 தொகுதிகளில் பாஜகவும் 5 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளமும் ஒரு தொகுதியில் ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவும் போட்டியிடுகின்றன.
இதனால் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை கொண்ட இண்டியா கூட்டணியின் வாக்குகளை ஒவைசி கட்சி பெற வாய்ப்புள்ளது. சில நூறு முதல் சில ஆயிரம் வரையிலான இந்த வாக்குகள் இண்டியா கூட்டணிக்கு இழப்பை ஏற்படுத்தும்.
ஒவைசி சுமார் 15 வருடங்களாக வட மாநிலங்களில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தனது வேட்பாளர்களை நிறுத்தி வருகிறார். இதில், பிஹாரில் கிஷண்கஞ்ச் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அவரது கட்சி முதல்முறையாக வெற்றி பெற்றது. பிறகு 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் 5 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் 4 எம்எல்ஏக்கள் ஆர்ஜேடியில் இணைந்துவிட்டனர்.
இதர தேர்தல்களில் இவரது வேட்பாளர்கள் சிறுபான்மையினர் வாக்குகளை பெற்று பாஜகவுக்கு சாதகமாக்கினர். இதனால் பாஜகவின் ‘பி டீம்’ என வட மாநிலங்களில் இவரது கட்சி அழைக்கப்படுவது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT