Published : 29 Mar 2024 05:31 PM
Last Updated : 29 Mar 2024 05:31 PM
புதுடெல்லி: ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே, இன்று ரூ.1,823 கோடி செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ரூ.11 கோடி வரி பாக்கியில் கடந்த சில ஆண்டுகளாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது பழைய பான் கார்டை பயன்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராதமும் அடங்கும்.
வருமான வரித்துறை நோட்டீஸை தொடர்ந்து தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஒருவர், "சட்ட ரீதியாக இதை அணுகுவதற்காக எங்கள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.1,823 கோடி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த ஆண்டுகளுக்கான வரிக் கணக்குகளில் உள்ள முரண்பாடுகளுக்காக இந்த தொகையை அபராதமாக வருமான வரித்துறை விதித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன், “காங்கிரஸ் கட்சி ரூ.1,823 கோடி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக இருந்த 1993-94-ல் ஆண்டுகளில் மட்டும் ரூ.53 கோடி செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை விதிமீறல்களுக்கு விதிக்கும் அபராதத்தின் அடிப்படையில் பார்த்தால் பாஜக ரூ.4,600 கோடி அபராதம் செலுத்த வேண்டும். அடுத்த வார தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை நாடும். ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் நிதி ரீதியாக சிக்கலை எதிர்கொள்ள வேண்டும் என்று பாஜக வருமான வரித்துறையை பயன்படுத்தி வருகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.
ஏற்கெனவே, வருமான வரித் துறையால் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் ஏற்கனவே நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...