Published : 29 Mar 2024 04:30 PM
Last Updated : 29 Mar 2024 04:30 PM
புதுடெல்லி: "பிஹாரில் ராப்ரி தேவி செய்தது போல் டெல்லியில் தலைமை பதவியை வகிக்கத் தயாராகி வருகிறார் அரவிந்த் கேஜ்ரிவால் மனைவி சுனிதா" என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஹர்தீப் சிங் பூரியிடம் அரவிந்த் கேஜ்ரிவால் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹர்தீப் சிங் பூரி, "ஒன்பது முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியும் கேஜ்ரிவால் பதிலளிக்கவில்லை. அதன்பின்னரே அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரது வீடு தேடிச் சென்றனர். அதை விடுங்கள். தற்போது கேஜ்ரிவாலுக்கு நேரம் மிகவும் குறைவாக உள்ளது.
இப்போது நீங்கள் சொல்லும் மேடம் (கேஜ்ரிவால் மனைவி சுனிதா) தலைமை பதவிக்கு தயாராகி வருகிறார். கேஜ்ரிவாலும், அவரது மனைவியும் அனைவரையும் ஓரங்கட்டிவிட்டார்கள். பிஹாரில் ராப்ரி தேவி செய்தது போல் தனது கணவரின் பதவியை வகிக்க கேஜ்ரிவால் மனைவி சுனிதா தயாராகி வருகிறார்" என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டிருப்பதால் டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனால், சிறையில் இருந்தவாறே ஆட்சி நடத்தி வருகிறார் கேஜ்ரிவால். அவர் விரைவில் பதவி விலகுவார் என்று பாஜக தரப்பில் சொல்லப்பட்டு வரும் நிலையில்தான் அவரது மனைவி முதல்வர் பதவியை ஏற்கலாம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் இருந்து அவர் தொடர்பான அனைத்து தகவல்களையும் கூறிவருவது அவரின் மனைவி சுனிதாவே. முன்னதாக, இன்று கேஜ்ரிவாலுக்காக அவரது மனைவி சுனிதா ‘கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்’ என்ற வாட்ஸ் அப் பிரச்சாரத்தை அறிவித்துள்ளார். சிறையில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மக்கள் வாழ்த்துகள் அனுப்ப வாட்ஸ் அப் எண் ஒன்றையும் அவர் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT