Published : 29 Mar 2024 05:08 PM
Last Updated : 29 Mar 2024 05:08 PM

cVIGIL | நாடு முழுவதும் சி-விஜில் செயலியில் இதுவரை 79,000+ விதிமீறல் புகார்கள் பதிவு

புதுடெல்லி: தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க சி-விஜில் (cVIGIL) செயலி மக்களிடத்தில் சிறந்த கருவியாக மாறியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 79,000-க்கும் மேற்பட்ட விதிமீறல் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தப் புகார்களில் 99 சதவீத புகார்கள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், அவற்றில் 89 சதவீத புகார்கள் 100 நிமிடங்களுக்குள் தீர்க்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்த தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, 58,500 புகார்கள் (மொத்த புகார்களில் 73 சதவீதம்) சட்ட விரோதமாக வைக்கப்பட்ட விளம்பரங்கள் மற்றும் பேனர்களைப் பற்றியது. 1,400 புகார்கள் பணம், பரிசு பொருள்கள் மற்றும் மதுபானம் விநியோகம் குறித்தவை.

சுமார் 3 சதவீத புகார்கள் (2,454) சொத்துக்களைச் சேதப்படுத்துவது தொடர்பானவை. 1,000 புகார்கள் தடைசெய்யப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரச்சாரம் செய்தது தொடர்பாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தியது தொடர்பாக பதிவாகியுள்ளன. துப்பாக்கி காட்டி மிரட்டியதாக வந்த 535 புகார்களில் அவை அனைத்தும் தீர்த்துவைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பின்போது, எந்த ஒரு தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பரிசு பொருள் விநியோகம் குறித்து புகார் தெரிவிக்க சி-விஜில் செயலியைப் பயன்படுத்தும்படி தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவுறுத்தியிருந்ததை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகத்தில்... - “நடத்தை விதிமீறல் உட்பட தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ‘சி-விஜில்’ செயலியை பொதுமக்கள் பயன்படுத்தலாம். நிகழ்நேர வீடியோ அல்லது புகைப்படத்தை அனுப்பினால், அந்த ஆதாரம் அடிப்படையில், 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இதுவரை, இந்த செயலி மூலம் 1,383 புகார்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

cVIGIL செயலி குறித்து.. - வாக்குக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக மக்கள் புகார் தெரிவிக்க 'சி-விஜில்' எனும் செயலியை தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தச் செயலியை (cVIGIL) ‘ஸ்மார்ட் போன்’ வைத்திருப்பவர்கள் ‘கூகுள் பிளே ஸ்டோர்’ அல்லது தேர்தல் ஆணையம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செயலாம். அதில், அலைபேசி எண், பெயர், முகவரி, மாநிலம், மாவட்டம், பின்கோடு ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவதை தாங்கள் அறியநேர்ந்தால், அதனை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, உரிய ஆதாரத்துடன் செயலியில் பதிவு செய்து, புகார் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர் தனது பெயர் விவரத்தை வெளியிடாமல் ரகசியம் காக்கவிரும்பினால் அதற்கான வசதியும் அதில் உள்ளது.

இந்தச் செயலி மூலம் பெறப்படும் புகார்களின் மீது 100 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகார் கொடுத்தவரின் அலைபேசி எண்ணிற்கு நடவடிக்கை எடுத்த பின் அது தொடர்பான விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த ‘சி - விஜில்’ செயலி இந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே உள்ளது. இம்மொழிகள் தெரியாதவர்கள் இச்செயலியை பயன்படுத்த இயலாத நிலையே உள்ளது. நேர்மையாக தேர்தலை அணுக விரும்புவோர் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளையும் இந்த ‘சி- விஜில்’ செயலியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தேதி மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடக்க இருக்கிறது. வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x