Published : 29 Mar 2024 01:38 PM
Last Updated : 29 Mar 2024 01:38 PM
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்காக அவரது மனைவி சுனிதா ‘கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்’ என்ற வாட்ஸ் அப் பிரச்சாரத்தை இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார். சிறையில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மக்கள் வாழ்த்துகள் அனுப்ப வாட்ஸ் அப் எண் ஒன்றை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சுனிதா வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது: “இன்றிலிருந்து ‘கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்” என்ற ஒரு இயக்கத்தை நாங்கள் தொடங்குகிறோம். இந்த எண்ணின் மூலம் நீங்கள் உங்கள் ஆசீர்வாதங்கள் மற்றும் பிரார்த்தனைகளை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேஜ்ரிவாலுக்கு அனுப்பலாம்” என்று தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவலை ஏப்.1-ம் தேதி வரை நீதிமன்றம் நீடித்த அடுத்த நாளில் சுனிதாவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று (வியாழக் கிழமை) நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுனிதா, “அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவரது சர்க்கரை அளவு ஏறி இறங்கி வருகிறது. அவர் மிகவும் துன்புறுத்தப்படுகிறார். இந்தநிலை நீண்ட நாள் நீடிக்காது. மக்கள் இதற்கு பதிலடி கொடுப்பார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக நீதிமன்ற விசாரணையின் போது கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர், “நீங்கள் விரும்பு காலம் வரை என்னை காவலில் வைக்கலாம். நான் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத் துறை அழிக்கப் பார்க்கிறது. நான் கைது செய்யப்பட்டுள்ளேன். ஆனால், எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி எனச் சொல்லவில்லை.
சிபிஐ 31,000 பக்கங்கள், அமலாக்கத் துறை 21,000 பக்கங்கள் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளன. இந்த இரண்டையும் ஒன்றாக படித்தால் கூட எஞ்சி நிற்கும் கேள்வி, நான் ஏன் கைது செய்யப்பட்டேன் என்பதே? ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் என் பெயர் நான்கு முறை மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கில் இதற்கு முன் கைது செய்யப்பட்டு அப்ரூவராக மாறியவர்கள் என் மீது குற்றம்சாட்ட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அமலாக்கத் துறைக்கு ஒரே ஒரு பணி மட்டுமே, அது எப்படியாவது என்னை சிக்க வைக்க வேண்டும் என்பதே. இந்த வழக்கில் நான்கு சாட்சிகளால் நான்கு முறை என் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பதவியில் இருக்கும் முதல்வரைக் கைது செய்ய 4 சாட்சிகள் போதுமானதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த விசாரணையின் போது, கைது செய்யப்பட்டிருப்பவரிடம் இருந்து மேலதிக தகவல்களை பெறுவதற்காக அவரது காவலை நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை கோரியது. இதனைத் தொடர்ந்து ஏப்.1ம் தேதி வரை காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT