Published : 29 Mar 2024 11:04 AM
Last Updated : 29 Mar 2024 11:04 AM
தெலங்கானா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் களை கட்ட ஆரம்பித்துள்ளது. இங்கு வரும் மே மாதம் 13-ம் தேதி 17 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தற்போது தெலங்கானாவில் புதிதாக ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி, மக்களவைத் தேர்தலிலும் தனது பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளது.
ஹைதராபாத் மக்களவை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று எம்பியாக உள்ளவர் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசதுத்தீன் ஓவைஸி. இம்முறை பலமான அல்லது பிரபலமான ஒருவரை களம் இறக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அதன்படி, பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை களம் இறக்கலாம் என ஏறக்குறைய தீர்மானம் செய்யப்பட்டு விட்டது.
இது தொடர்பாக சானியா மிர்சா விடமும், அவரத் குடும்பத்தாரிடமும் கூட காங்கிரஸார் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். ஒருவேளை சானியா மிர்சா இல்லையெனில் அவரது தந்தையான இம்ரான் மிர்சாவை களம் இறக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன் கிழமை டெல்லியில், தெலங்கானாவில் மீதமுள்ள தொகுதி வேட்பாளர்கள் தேர்வு குறித்து மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு தரப்பில் ஆலோசனை நடந்தது. இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் அதிகம் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு அசதுத்தீன் ஓவைஸியின் தந்தையும், ஏஐ எம் ஐ எம் கட்சியின் நிறுவனருமான சலாவுத்தீன் ஓவைசி ஹைதராபாத் எம்பியாக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு, தற்போது இக்கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஓவைஸி தொடர்ந்து இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.
இவரை தோற்கடிக்க இம்முறை பாஜக சார்பில் சமூக தன்னார்வலரான மாதவி லதா என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. ஆதலால், இவர்கள் இருவரை விட பிரபலமான ஒருவரை இத்தொகுதியில் களம் இறக்க வேண்டுமென காங்கிரஸ் முடிவு செய்து சானியா மிர்சாவை விளையாட்டு துறையிலிருந்து அரசியல் துறைக்கு களமிறக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதனால், ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் ? என்பதில் மக்களிடமும் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT