Published : 29 Mar 2024 10:24 AM
Last Updated : 29 Mar 2024 10:24 AM
பெங்களூரு: அண்மையில் பாஜகவில் இணைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு அக்கட்சி மேலிடம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்திருப்பது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் (67) கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் பாஜக மேலிடம் வயோதிகம் காரணமாக அவருக்கு சீட் வழங்க மறுத்தது. இதனால் அதிருப்தி அடைந்த அவர் காங்கிரஸில் இணைந்து தேர்தலை சந்தித்தார். அவர் தேர்தலில் தோற்றாலும் காங்கிரஸ் அவருக்கு எம்எல்சி வழங்கியது.
இந்நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் கடந்த ஜனவரியில் காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார். மேலும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என தன் அரசியல் குருவான எடியூரப்பா மூலம் பாஜக மேலிடத்துக்கு தூது அனுப்பினார். ஆனால் கர்நாடக பாஜகவை சேர்ந்த ஈஸ்வரப்பா, சதானந்த கவுடா, அபய் பாட்டீல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் பாஜக மேலிடம் ஜெகதீஷ் ஷெட்டருக்கு பெலகாவியில் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கியுள்ளது. அதேவேளையில் ஈஸ்வரப்பா, சதானந்த கவுடா ஆகியோருக்கு சீட் வழங்க மறுத்துள்ளது. இதனால் ஈஸ்வரப்பா, ''கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவருக்கு மீண்டும் சீட் வழங்கியது ஏன்? லிங்காயத்து வகுப்பை சேர்ந்தவர் என்பதால் எடியூரப்பா அவருக்கு ஆதரவாக செயல்படுகிறாரா?''என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெலகாவி தெற்கு பாஜக எம்எல்ஏ அபய் பாட்டீல், ''ஆரம்பத்தில் பெலகாவிக்கு சம்பந்தம் இல்லாத ஜெகதீஷ் ஷெட்டருக்கு சீட் கொடுப்பதை நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் எடியூரப்பா எங்களிடம் பேசி தெளிவுப்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக இதனை ஏற்கிறோம்''என்றார்.
இந்நிலையில் நேற்று பெலகாவியில் பிரச்சாரத்தை தொடங்கிய ஜெகதீஷ் ஷெட்டர், "எடியூரப்பாவின் ஆசியால் பாஜக மேலிடம் எனக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. அவர் என்னை முதல்வர் ஆக்கி அழகு பார்த்தார். இப்போது எம்பி ஆக்கி அழகு பார்க்க விரும்புகிறார். இதற்கு பெலகாவி மக்கள் உறுதுணையாக இருப்பார்கள்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT