Published : 28 Mar 2024 06:36 PM
Last Updated : 28 Mar 2024 06:36 PM

‘‘எங்களின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை ஏற்க முடியாது’’ - இந்தியா கண்டனம்

புதுடெல்லி: எங்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதை ஏற்க முடியாது என அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "அமெரிக்க வெளியுறவுத் துறையின் நேற்றைய கருத்துகள் தொடர்பாக அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரியை அழைத்து இந்தியா தனது கடுமையான ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் தெரிவித்தது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் சமீபத்திய கருத்துக்கள் தேவையற்றவை.

நமது தேர்தல் மற்றும் சட்ட செயல்முறைகள் மீதான இத்தகைய வெளிப்புற குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்தியாவில், சட்ட நடைமுறைகள் சட்டத்தின் ஆட்சியின்படி நடக்கின்றன. இதேபோன்ற நெறிமுறைகளைக் கொண்ட எந்த ஒரு ஜனநாயக நாடும், இதனை பாராட்ட தயங்கக் கூடாது. இந்தியா அதன் வலுவான மற்றும் சுதந்திரமான ஜனநாயக நிறுவனங்களுக்காக பெருமை கொள்கிறது.

எந்தவிதமான தேவையற்ற வெளிப்புற தாக்கங்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் சர்வதேச உறவுகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. அரசுகள் மற்றவர்களின் இறையாண்மை மற்றும் உள் விவகாரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய எதிர்ப்பின் பின்னணி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது விவகாரம் குறித்து பேட்டி அளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது, தூதரக அதிகாரி குளோரியா பெர்பேனாவுக்கு சம்மன் உள்பட பல நடவடிக்கைகளையும் நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம்.

அதேபோல், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது. இதனால் அக்கட்சி தேர்தலில் முழுவீச்சில் பிரச்சாரம் செய்வது தடைபடும் சூழல் உருவாகியுள்ளது என்பதையும் நாங்கள் அறிவோம். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நியாயமான, வெளிப்படையான, காலதாமதமின்றி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் இந்தக் கருத்துக்கு இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. இந்தியாவிலுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்துக்கு அமெரிக்க தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனாவை நேரில் அழைத்து இந்த கண்டனத்தை இந்திய அரசு பதிவு செய்தது. இந்தக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். ஏற்கெனவே, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனி தூதரகத்தின் அதிகாரி ஜார்ஜ் என்ஸ்வெய்லர் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x