Published : 28 Mar 2024 05:35 PM
Last Updated : 28 Mar 2024 05:35 PM

“100 நாள் வேலை ஊதிய உயர்வு ரூ.7 மட்டுமே... அதை விளம்பரமாக்க ரூ.700 கோடி...” - ராகுல் சாடல்

ராகுல் காந்தி | கோப்புப்படம்

புதுடெல்லி: 2024-25 நிதி ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு, எதிர்க்கட்சி அறிவித்துள்ள தொழிலாளர் நீதி உத்தரவாதமான ரூ.400-ஐ விட குறைவாக இருப்பதாக பாஜக மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை அதிகரித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த ஊதிய உயர்வு குறித்து பாஜக அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட ஊழியர்களுக்கு வாழ்த்துகள். பிரதமர் நரேந்திர மோடி உங்களுடைய ஊதியத்தில் ரூ.7 அதிகரித்துள்ளார்.

இப்போது பிரதமர் உங்களிடம் இவ்வளவு அதிகமான பணத்தை நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்கலாம். மேலும் ரூ.700 கோடி செலவளித்து உங்களின் பெயரில் ‘நன்றி மோடி’ என பிரச்சாரம் செய்யலாம். மோடியின் இந்த மகத்தான பெருந்தன்மையால் கோபமடைந்திருப்பவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இண்டியா கூட்டணி அரசு முதல் நாளில் இருந்து தினமும் கூலியை ரூ.400 ஆக உயர்த்தப் போகிறது" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் ஊதியங்கள் திருத்தப்பட்டு வருகின்றன. மோடி அரசு 2024 - 25 ஆண்டுக்கான ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கபட்டுள்ள நிலையில், இது தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறதா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு விகிதம், அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் நீதி உத்தரவாதமான ரூ.400-ஐ விட குறைவாகவே உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் 25 உத்தரவாதங்களுடன் 5 நீதிக் கொள்கைகள் அறிவித்துள்ளது. அதில் தொழிலாளர் நீதி உத்தரவாதத்தின் கீழ் கீழ்கண்ட அனைவருக்கும் சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய சுகாதார சட்ட உரிமை ஏற்படுத்தப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.400 ஆக நிர்ணயம் செய்யப்படும்.

வேலை உத்தரவாத சட்டம் கொண்டுவரப்பட்டு, வேலை பாதுகாப்பு உறுதி செய்யப்படும். முறைசாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு வழங்கப்படும். மக்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக, ஒப்பந்த முறைகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x