Published : 28 Mar 2024 10:41 AM
Last Updated : 28 Mar 2024 10:41 AM
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்ததற்கு அந்நாட்டின் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்த நிலையில் மீண்டும் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. இந்த முறை கேஜ்ரிவால் பிரச்சினை மட்டுமல்லாது காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம் குறித்தும் கருத்து தெரிவித்து இன்னொரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் அளித்த பேட்டியில், “டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது, தூதரக அதிகாரி குளோரியா பெர்பேனாவுக்கு சம்மன் உள்பட பல நடவடிக்கைகளையும் நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம்.
அதேபோல், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது. இதனால் அக்கட்சி தேர்தலில் முழுவீச்சில் பிரச்சாரம் செய்வது தடைபடும் சூழல் உருவாகியுள்ளது என்பதையும் நாங்கள் அறிவோம்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நியாயமான, வெளிப்படையான, காலதாமதமின்றி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்,
அமெரிக்காவின் கருத்தும், கண்டனமும்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 22-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் கைது விவகார வழக்கு நியாயமாக நடைபெற வேண்டும் என்று அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது.
அமெரிக்காவின் இந்த கருத்துக்கு இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. இந்தியாவிலுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு அமெரிக்க தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனாவை நேரில் அழைத்து இந்த கண்டனத்தை இந்திய அரசு பதிவு செய்தது. இந்தக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஏற்கெனவே, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மனி தூதரகத்தின் அதிகாரி ஜார்ஜ் என்ஸ்வெய்லர் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிக் கணக்கு முடக்கம் விவகாரம்: இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் ஆகியவற்றின் வங்கிக் கணக்குகள் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டுள்ளன. 2018-19ம் ஆண்டுக்கான வருமான வரியைத் திரும்பச் செலுத்துவதில் 45 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டதால் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதுடன் ரூ.210 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டிருப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “பிரதமர் மோடி பயப்பட வேண்டாம். காங்கிரஸ் என்பது பணப் பலத்தின் பெயர் அல்ல... மக்கள் பலத்தின் பெயர். சர்வாதிகாரத்தின் முன் நாங்கள் ஒருபோதும் பணிந்ததில்லை, தலைவணங்கவும் மாட்டோம். இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க காங்கிரஸ் போராடும்” என விமர்சித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து அமெரிக்கா தற்போது கருத்து தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT