Published : 28 Mar 2024 06:00 AM
Last Updated : 28 Mar 2024 06:00 AM

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை: கேரள முதல்வர் மகள் மீது வழக்குப் பதிவு

கொச்சி: சட்டவிரோத பணப் பரிவர்த் தனையில் ஈடுபட்டதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா மீது அமலாக்கத் துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை அமலாக்கத் துறை விரைவில் விசாரணைக்கு அழைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கொச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டில் நிறுவனம் (சிஎம்ஆர்எல்) கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்குச் சொந்தமான ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்' என்ற ஐடி நிறுவனத்துக்கு 2018 ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு ரூ.1.72 கோடியை சட்டவிரோதமாக அனுப்பியுள்ளதாகவும் வீணா விஜயனின் ஐடி நிறுவனம் சிஎம்ஆர்எல் நிறுவனத்துக்கு எந்தச் சேவையும் வழங்கிடாத போதிலும், இந்தப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் கடந்த ஆண்டு வருமான வரித் துறை தெரிவித்தது.

இதையடுத்து மத்திய விசாரணை அமைப்புகள் வீணா விஜயனை கண்காணிக்கத் தொடங்கின. இந்நிலையில், கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் கீழ் உள்ள ‘தீவிர மோசடிகளுக்கான விசாரணை அலுவலகம்’ (எஸ்எப்ஐஓ) இது தொடர்பான விசாரணையைத் தொடங்கியது.

இந்த விசாரணைக்கு எதிராக வீணா விஜயனின் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்' நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, கடந்த மாதம் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சிஎம்ஆர்எல் நிறுவனத்தில் கேரள அரசு நிறுவனமான கேரள மாநில தொழில் மேம்பாட்டு கழகம் குறிப்பிட்ட அளவில் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில், எஸ்எப்ஐஓ விசாரணைக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றத்தில் கேரள மாநில தொழில் மேம்பாட்டு கழகம் மனுத்தாக்கல் செய்தது. ஆனால், விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்தது.

இந்நிலையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக வீணா விஜயன் மற்றும் அவரது நிறுவனம் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

சமீபத்தில் பாஜகவில் இணைந்த கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான பி.சி. ஜார்ஜின் மகன் ஷோன் ஜார்ஜ் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. வீணாவின் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ், சிஎம்ஆர்எல், கேரள மாநில தொழில் மேம்பாட்டு கழகம் ஆகிய மூன்றையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x