Last Updated : 27 Mar, 2024 06:59 PM

 

Published : 27 Mar 2024 06:59 PM
Last Updated : 27 Mar 2024 06:59 PM

லாலுவின் அடுத்த வாரிசு... யார் இந்த ரோகிணி ஆச்சார்யா? | 2024 தேர்தல் கள புதுமுகம்

ரோகிணி ஆச்சார்யா

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகளான ரோகிணி ஆச்சார்யா மக்களவைத் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார். லாலு பிரசாத் யாதவின் வாரிசுகள் தேஜஸ்வி யாதவ் உட்பட 3 பேர் ஏற்கெனவே அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா பிஹார் மாநிலத்தில் உள்ள சரன் தொகுதியில் போட்டியிடுகிறார். தந்தையின் அரசியல் செல்வாக்கு இவருக்கு கைகொடுக்குமா?

லாலுவின் வாரிசுகள்: குடும்ப அரசியலுக்கு பெயர் போன குடும்பம் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் குடும்பம். குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரும் அரசியலில் களம் கண்டிருக்கிறார்கள். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றதால், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை.

அதன் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் லாலுவின் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, நிதீஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். சமீபத்தில் நிதிஷ் குமார் மீண்டும் தனது கூட்டணியை மாற்றி பாஜகவுடன் இணைந்த நிலையில், அமைச்சர்களாக இருந்த லாலுவின் மகன்கள் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக மட்டும் உள்ளனர்.

இந்நிலையில்தான் ரோகிணி ஆச்சார்யாவை இந்த வருட மக்களவைத் தேர்தலில் களமிறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. அதோடு, ரோகிணி ஆச்சார்யா அரசியலுக்கு வந்தால், லாலுவின் நான்காவது அரசியல் வாரிசாக அவர் இருப்பார். தேஜஸ்வி யாதவ் தவிர, தேஜ் பிரதாப் யாதவ், டாக்டர் மிசா பாரதி ஆகியோர் அரசியலில் உள்ளனர்.

தேஜ் பிரதாப் யாதவ், முன்னாள் அமைச்சர் ஆவார். மிசா பாரதி மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார். ரோகிணி ஆச்சார்யா பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரான ராஜீவ் பிரதாப் ரூடியை எதிர்த்துப் போட்டியிடுகிறார். லாலுவின் இன்னொரு மகள் மீசா பாரதி மக்களவை தேர்தலில் பாடலிபுத்திரா தொகுதியில், பாஜக மூத்த தலைவர் ராம் கிருபால் யாதவை எதிர்த்து போட்டியிடுகிறார். லாலுவின் இரண்டு மகள்களும் தீவிர அரசியலில் களம் இறங்கியுள்ளனர்.

யார் இந்த ரோகிணி ஆச்சார்யா? - லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகள் தான் ரோகிணி ஆச்சார்யா. 44 வயதான இவர் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று மருத்துவராக உள்ளார். இவருக்கும் சாம்ரேஷ் சிங் என்பவருக்கும் 2022 இல்-திருமணம் ஆனது. ஆச்சார்யாவின் கணவர் ஒரு மென்பொருள் பொறியாளர் ஆவார். 20 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் வாழும் ரோஹிணி, லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய நண்பர் ராய் ரன்விஜய் மகனை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

லாலு பிரசாத் யாதவ், உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது அவரை கவனித்துக் கொண்டவர் ரோகிணி. மேலும் தந்தை லாலுவுக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்து தனது பாசத்தைக் காட்டி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றவர்.

அச்சமயத்தில், இது குறித்து ரோகினி ஆச்சார்யா, அப்பாவுக்கு என்னுடைய சிறுநீரகத்தை (kidney) அளிக்கப் போகிறேன். அதில் நான் பெருமைகொள்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்திருக்கிறார். இது தலைப்பு செய்திகளில் வெளியாகி, மக்கள் மனதில் இடம் பிடித்தார் ரோகிணி ஆச்சார்யா. எதிர்க்கட்சித் தலைவர்களான கிரிராஜ் சிங் மற்றும் நிஷிகாந்த் துபே ஆகியோரிடமிருந்தும் மிகுந்தப் பாராட்டைப் பெற்றார்.

தலைவர்களுக்கு பதிலடி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர் ரோகிணி ஆச்சார்யா. மேலும், அண்மையில் வாரிசு அரசியல் குறித்து பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் பேசியிருந்த நிலையில், லாலு பிரசாத் மகள் ரோகிணி ஆச்சார்யா, ‘சொந்த குறைகள் கண்ணுக்கு தெரியாது. ஆனால் மற்றவர்கள் மீது சேற்றை வீசுகிறார்கள்’ என அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர், ஊழல் வழக்கு ஒன்றில் லாலு பிரசாத் யாதவிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதைக்கண்டு அவரது மகள் ரோகிணி ஆச்சார்யா, ட்விட்டரில் கடுமையாகப் பதிவிட்டிருந்தார். அதில், “அப்பாவைத் தொடர்ந்து தொந்தரவு செய்கிறீர்கள். இது சரியில்லை” என காட்டமாக தெரிவித்திருந்தார்.

சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் ஆச்சார்யா இத்தொகுதியில் களம் கண்டு வெற்றி கனியை பறிப்பாரா? தந்தையின் அரசியல் நுணுக்கங்கள், அரசியல் செல்வாக்கு இவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முந்தைய பகுதி: பாஜக வேட்பாளர் ஆன சீரியல் ராமர்... யார் இந்த அருண் கோவில்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x