Published : 27 Mar 2024 04:14 PM
Last Updated : 27 Mar 2024 04:14 PM

கேஜ்ரிவால் கைது விவகாரத்தில் அமெரிக்க கருத்துக்கு எதிர்ப்பு - தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்

அமெரிக்கத் தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனா

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா, அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனாவுக்கு சம்மன் அனுப்பி அழைத்து பேசியுள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் நடந்து வரும் சில சட்டபூர்வ நடவடிக்கை தொடர்பான அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளரின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இரு நாடுகளின் தூதரக ரீதியிலான உறவுகளில் ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் உள்விவகாரங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சக ஜனநாயக நாடுகளின் பொறுப்புகளை இன்னும் அதிகப்படுத்தும். இல்லையெனில் அவை சில தவறான முன்னுதாரணங்களுக்கு வழிவகுக்கும்.

இந்தியாவின் சட்டபூர்வ நடவடிக்கைகள் சுதந்திரமான நீதித்துறையினை அடிப்படையாகக் கொண்டது. அது சரியான நேரத்தில் நீதிக்கு உறுதியளிக்கிறது. அதன் மீது கருத்துகளைத் தெரிவிப்பது தேவையற்றது" என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்காவின் துணைத் தூதரக அதிகாரி குளோரியா பெர்பெனா இன்று காலையில் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் நேரில் விளக்கம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறும்போது, "அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவருக்கு நியாயமான, வெளிப்படையான, சரியான சட்ட நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஊக்குவிக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

கேஜ்ரிவாலின் கைது தொடர்பாக ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சம்மன் அனுப்பிய மறுநாளில் இந்திய வெளியுறவுத் துறையின் அமெரிக்க தூதரகத்தின் துணைத் தலைவருக்கு சமமன் அனுப்பும் நடவடிக்கை நடந்துள்ளது.

இதனிடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், “இதுபோன்ற கருத்துகள் எங்களுடைய நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவும், எங்களின் சுதந்திரமான நீதித்துறையினை குறைத்து மதிப்பிடுவதாகவே பார்க்கப்படுகிறது. இந்திய வலிமையான மற்றும் துடிப்பான சட்டத்தின் ஆட்சியைக் கொண்ட ஜனநாயக நாடு. எனவே இதுபோன்ற ஒருதலைபட்சமான கருத்துகள் தேவையற்றது" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x