Published : 27 Mar 2024 10:12 AM
Last Updated : 27 Mar 2024 10:12 AM
மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் பாஜக தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) கட்சியுடன் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்கலாம் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் பஞ்சாப் மாநில பாஜக தலைவர் சுனில் ஜாக்கர் நேற்று கூறும்போது, “மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் பாஜக தனித்து போட்டியிட உள்ளது” என்றார்.
இதன் மூலம் பாஜக – எஸ்ஏடி கூட்டணி தொடர்பான ஊகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.
இது தொடர்பாக சுனில் ஜாக்கர் மேலும் கூறும்போது, “பொது மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் கருத்துக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல வளர்ச்சிப் பணிகளை பஞ்சாபில் செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
கடந்த 1996-ல் இருந்து எஸ்ஏடியும் பாஜகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்தன. இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2020 செப்டம்பரில் பாஜக கூட்டணியில் இருந்து எஸ்ஏடி வெளியேறியது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு ஆதரவு காணப்பட்டபோதும் பஞ்சாபில் பாஜக –எஸ்ஏடி கூட்டணி விரும்பிய இடங்களை பெறவில்லை. இங்கு காங்கிரஸ் 8 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் எஞ்சிய 5 தொகுதிகளை பாஜக, எஸ்ஏடி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பெற்றன.
மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் ஜூன் 1-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் உள்ளன. என்றாலும் பஞ்சாபில் இவ்விரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன. தற்போது எஸ்ஏடி – பாஜக கூட்டணி ஏற்படாததால் இங்கு நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT