Published : 16 Feb 2018 12:41 PM
Last Updated : 16 Feb 2018 12:41 PM
காவிரி நிதிநீர் பங்கீடு வழக்கில் கர்நாடக மாநிலத்துக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி நீர் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடகம் வரவேற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்துக்கும், தமிழகத்துக்கும் காவிரி நிதி நீரை பங்கீட்டுக் கொள்வதில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை இருந்து வருகிறது. காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்தது.
இந்த 192 டிஎம்சி நீர் போதாது கூடுதலாக 72 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை 132 டிஎம்சியாக குறைத்து உத்தரவிடக் கோரி கர்நாடக அரசும் மேல்முறையீடு செய்தது. இதே போல கேரளாவும், புதுச்சேரியும் கூடுதல் நீரை திறந்துவிடக்கோரி மேல்முறையீடு செய்தன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசாரணை தொடங்கியது, 28 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வாலிகர், அமிதவ ராய் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஒதுக்கிய 192 டிஎம்சி நீரை 177.25 டிஎம்சி நீராகக் குறைத்து பில்லிகுண்டு அணையில் இருந்து திறந்துவிட வேண்டும் எனத் தெரிவித்தது. அதேசமயம், கர்நாடக மாநிலத்துக்கு கூடுதலாக 14.75 நீரை ஒதுக்கீடு செய்தது. அதாவது கர்நாடக மாநிலத்துக்கு காவிரி நடுவர் மன்றம் 270 டிஎம்சி நீர் ஒதுக்கிய நிலையில் இப்போது 284.75 டிஎம்சி நீர் ஒதுக்கியது. பெங்களூரு மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு கூடுலாக 4.75 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்தது.
அதேசமயம் கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என்ற அளவில் மாற்றமும் செய்யவில்லை.
இந்த தீர்ப்புக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள மக்களும், அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன. கர்நாடக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
உச்ச நீதிமன்றம் கர்நாடகத்துக்கு கூடுதல் நீரை ஒதுக்கீடு செய்து தீர்ப்பு அளிக்கப்பட்டவுடன் முதல்வர் சித்தராமையாவுக்கு எம்.எல்ஏ.க்கள் பாராட்டு தெரிவித்தனர். சட்டப்பேரவையில் அவரின் இருக்கைக்கு சென்று எம்எல்ஏக்கள் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.
மாநில முன்னாள் முதல்வரான ஜெகதீஷ் ஷெட்டர் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், “ தீர்ப்பை முழுமையாக படித்தபின் கருத்துக் கூறுகிறேன். ஆனால், கர்நாடகத்துக்கு கூடுதல் நீர் ஒதுக்கீடு செய்த தீர்ப்பை வரவேற்கிறேன்” என்றார்.
கர்நாடக வேதிகா ரக்சனா வேதிகா அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
கர்நாடக மாநில வழக்கறிஞர் மோகன் வி கார்த்தி கூறுகையில், “ உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இரு மாநிலங்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு, இந்த தீர்ப்பு சமநிலையுடன் வழங்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் நீண்ட நாட்களுக்கு அமைதி நிலவ இது துணை புரியும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT