Published : 09 Feb 2018 07:44 AM
Last Updated : 09 Feb 2018 07:44 AM
ஆந்திர மாநிலத்திற்கு நீதி கிடைக்க மத்திய அரசுடன் தர்ம யுத்தம் நடைபெற்று வருகிறது. இதனை எக்காரணம் கொண்டும் கைவிட வேண்டாம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தினார்.
துபாய் சென்றுள்ள சந்திரபாபு நாயுடு, அங்கிருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களிடம் நேற்று பேசினார். அப்போது அவர், “மாநிலத்திற்கு முறைப்படி வழங்க வேண்டிய நிதிகளை மத்திய அரசு வழங்காதிருப்பதால்தான் போராட வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இது ஒரு தர்ம யுத்தம். இதனை நாடறியச் செய்ய வேண்டியது நமது கடமை. அதற்காக எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபடுங்கள். இதனை எக்காரணம் கொண்டும் கைவிட வேண்டாம்.
இரு அவைகளிலும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுங்கள். மாநில உரிமைக்காக நாம் யாருக்காகவும், எதற்காகவும் இறங்கிவரத் தேவையில்லை. மாநிலத்தை பிரிக்கும்போது பார்க்காத ஃபார்முலா, நிதிப் பற்றாக்குறைக்கும், சிறப்பு நிதி வழங்குவதிலும் மத்திய அரசு பார்க்கலாமா? ஆந்திர மாநிலத்திற்கு மத்திய அரசு இழைத்துள்ள அநீதி குறித்து, சிறிய புத்தகத்தை அச்சிட்டு, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விநியோகம் செய்யுங்கள்.
மாநிலத்திற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் 2-3 மணி நேரம் வரை விவாதம் நடைபெற வேண்டும். இல்லையேல், வரும் மார்ச் 5-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கும்போது, முதல் நாளிலிருந்தே நமது போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT