Published : 16 Feb 2018 07:30 AM
Last Updated : 16 Feb 2018 07:30 AM

ஆந்திராவில் பொம்மைகளாக செய்து ரூ.4 கோடி செம்மரம் கடத்தியவர் கைது

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதிகளில் இருந்து செம்மரங்களை வெட்டி, அவற்றை பொம்மைகளாக செய்து கடத்தி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அவரிடமிருந்து ரூ.4 கோடி மதிப்பிலான செம்மர பொம்மைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் அகர்வால். இவர் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டி இந்தோனேஷியாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வந்துள்ளார். மேலும், சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அந்த மரக்கட்டைகளில் பொம்மைகள் செய்து அதனை அவர் அனுப்பி வந்திருக்கிறார். இந்நிலையில், இந்த நூதன மோசடி குறித்து போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடப்பாவில் தங்கியிருந்த அசோக்குமார் அகர்வாலை போலீஸார் நேற்று கைது செய்தனர். அப்போது, அங்கிருந்து சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான செம்மர பொம்மைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் இதுவரை 1,000 டன்களுக்கு மேல் செம்மரங்களை வெட்டி, கடத்தியிருப்பது தெரியவந்தது.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x