Published : 26 Mar 2024 08:16 PM
Last Updated : 26 Mar 2024 08:16 PM
புதுடெல்லி: ‘சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பிரதமர் பதவியை தியாகம் செய்துள்ளனர்’ என்ற கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “இந்திரா காந்தி குடும்பத்தால் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியை ஒன்றுபடுத்த முடியும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சி இக்கட்டான சூழலில் இருந்தபோது, 2004-ம் ஆண்டு நாட்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை சோனியா ஆட்சிக்கு கொண்டுவந்தார். அவர் (சோனியா காந்தி) காங்கிரஸ் அரசை மீண்டும் கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருந்தார். கட்சி மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. என்றாலும் அவர் கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்தார். அனைத்து எம்.பி.களும் சோனியா பிரதமராக வேண்டும் என்று விரும்பிய போதிலும், யுபிஏ-வை பொருட்படுத்தாமல் அவர் மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார்.
அப்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி முழுவதும் சோனியாவே பிரதமராக வேண்டும் என்று விரும்பியது. நாட்டின் நலனுக்காக அவர் இந்தத் தியாகத்தைச் செய்தார். ஒரு நாட்டின் பிரதமராகும் வாய்ப்பை பெண் ஒருவர் மறுப்பது உலக வரலாற்றில் மிகப் பெரிய தியாகம். நாட்டுக்காக இந்திரா காந்தி குடும்பம் செய்த மிகப் பெரிய தியாகம் இது" என்றார் டி.கே.சிவகுமார்.
தொடர்ந்து, வரும் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் இதே தியாகத்தை ராகுல் காந்தியும் செய்வாரா என்று கேள்விக்கு பதில் அளித்த சிவக்குமார், "அந்த முடிவு, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே எடுக்கப்படும். முதலில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம். கட்சியும், கட்சியின் எம்பிக்களும் அந்த முடிவை எடுப்பார்கள்.
நாட்டின் ஒற்றுமைக்காகவும், நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், நாட்டுக்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக போராடி வரும் அவர் (ராகுல் காந்தி) நம்முடையத் தலைவர். நாட்டின் வரலாற்றில் அவர் அளவுக்கு யாரும் நடந்தது இல்லை. அவரும் நாட்டுக்காக மிகப் பெரிய தியாகம் செய்துள்ளார்.
மன்மோகன் சிங்குக்கு பின்னர் அவரும் பிரதமராகியிருக்கலாம். அதுவரை அவர் அதிகாரத்தைப் பார்த்ததில்லை. ஆனால், அவர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்க விரும்பினார். அவர் எனக்கு ஒரு பொருளாதார நிபுணர் (மன்மோகன் சிங்) வேண்டும், அவரே பிரதமராக தொடரட்டும் என்றார். அவருக்கு வாய்ப்பு இருந்தது. அவர் (ராகுல் காந்தி) தலைமை ஏற்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் அழுத்தம் கொடுத்தோம். ஆனாலும் மன்மோகன் சிங் நாட்டை வழிநடத்தட்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இந்திரா காந்தி குடும்பத்தால் மட்டுமே காங்கிரஸை ஒன்றுபடுத்த முடியும். காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கும்போது நாடு ஒற்றுமையாக இருக்கும். காங்கிரஸ் கட்சி வரலாற்றில் இது மிகப் பெரிய பலம். அது நாட்டை ஒற்றுமையாக வைத்துள்ளது" என்றார்.
ராகுல் காந்தி பிரதமராக விரும்பில்லையா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “நான் இப்போது இதுபற்றி கருத்துகூற விரும்பவில்லை. இந்த மக்களவைத் தேர்தல் முடியட்டும், பின்னர் நான் கருத்து கூறுகிறேன். மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன்" என்றார்.
முன்னாள் பிரதமரும், தனது கணவருமான ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு பின்பு 7 ஆண்டுகள் கழித்து சோனியா காந்தி காங்கிரஸ் கட்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்றார். 1998 முதல் 2017 வரை காங்கிரஸின் தலைவராக அவர் தொடர்ந்தார்.
அதேபோல், கடந்த 2004-ம் ஆண்டு இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்துடன், முன்கூட்டியே தேர்தலைச் சந்தித்த பாஜக அந்தத் தேர்தலில் 138 இடங்களை மட்டுமே பிடித்தது. காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் வென்றிருந்தது. சிபிஎம், சமாஜ்வாதி கட்சிகள் தலா 43 இடங்களிலும், ஆர்ஜேடி கட்சி 24 இடங்களிலும் வென்றிருந்தன. பாஜக தனது படுதோல்வியை ஒப்புக்கொண்டது. பிற கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியை அமைத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. மன்மோகன் சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT