Last Updated : 26 Mar, 2024 08:32 PM

17  

Published : 26 Mar 2024 08:32 PM
Last Updated : 26 Mar 2024 08:32 PM

வேட்பாளர் விலகல்கள் முதல் கைகூடாத கூட்டணிகள் வரை: பாஜக ‘இலக்கு 400’-க்கு ஆபத்தா?

அடுத்தடுத்து கூட்டணி முறிவு, பாஜக வேட்பாளர்கள் விலகல், சில மாநிலங்களில் தேர்தல் போட்டியில் இருந்து கட்சியே விலகல் என அடுத்தடுத்த ‘சம்பவங்கள்’ அரங்கேறும் சூழலில், இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 400 தொகுதிகளை வெல்வது என்ற பாஜகவின் ‘இலக்கு’ சாத்தியமா? - இதோ சற்றே விரிவான பார்வை...

விலகும் வேட்பாளர்கள்! - பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான ஒரு மணி நேரத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரஞ்சன் பட் தான் போட்டியிட போவதில்லை என அறிவித்தார். மேலும், சபர்காந்தா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிகாஜி தாக்கூர் போட்டியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இவர்கள் இருவரும் மூத்த நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 30 ஆண்டுகளாகப் பாஜக ஆட்சி புரியும் மாநிலமாக குஜராத் இருக்கிறது. மேலும், பிரதமர் மோடி அங்கு முதல்வராக இருந்தார். இந்த நிலையில், அங்கு அடுத்தடுத்து பாஜக வேட்பாளர்கள் சிலர் விலகினர். அதேபோல், பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பாஜக மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சத்யதேவ் பச்சௌரி தேர்தலில் போட்டியிட மறுத்து பாஜக தலைமைக்கு கடிதம் எழுதி பரபரப்பை எற்படுத்தி இருக்கிறார். முன்னதாக, மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. பாஜக வேட்பாளர்கள் தோல்வி பயத்தில் விலகி இருப்பதாகவே எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தை முன்வைத்து வருகின்றனர்.

போட்டியில் இருந்து விலகும் பாஜக! - வடகிழக்கு மாநிலங்களில் பாஜக போட்டியிடாமல் விலகியுள்ளது. கிட்டத்தட்ட 3 மாநிலங்களில் பாஜக போட்டியிடப் போவதில்லை. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து ஆகியவற்றில் போட்டியிடப் போவதில்லை என பாஜக அறிவித்துள்ளது. குறிப்பாக, மேகாலயாவில் 2 தொகுதிகள், மணிப்பூரில் 1 தொகுதி மற்றும் நாகலாந்தில் ஒரு தொகுதியில் பாஜக களம் காணவில்லை. அதற்குப் பதிலாக மாநில கட்சிகளுக்கு ஆதரவை மட்டும் தெரிவிக்க திட்டமிட்டுள்ளது.

மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. மணிப்பூர் கலவரத்துக்கு ஆளும் பாஜகதான் காரணம் எனக் குற்றச்சாட்டை முன்வைத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அங்கு போட்டியிடப் போவதில்லை என பாஜக அறிவித்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மணிப்பூரில் பெரிய அளவில் கலவரம் வெடித்தும் கூட, பிரதமர் மோடி அம்மாநிலத்துக்குச் செல்லவில்லை என்னும் விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் நிலையில், அங்கு போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளது பாஜக. அது மிகக் குறைந்த தொகுதிதான் என்னும் வாதங்களை பாஜக வைக்கக் கூடும். ஆனால், தொகுதி எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அந்தத் தொகுதியில் களம் காண பாஜகவால் முடியவில்லை என்னும் கருத்து முன்வைக்கப்பட்டு வருவதையும் புறம்தள்ளிவிட முடியாது.

பாஜக கூட்டணியில் இழுபறி! - அதேபோல்,பாஜக பெரிய அளவிலான கூட்டணியை எந்த மாநிலங்களிலும் உருவாக்கவில்லை. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் ’சிவசேனா- பாஜக’ இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது. அதேபோல், ஒடிசாவில் 15 ஆண்டுகளுக்குப் பின்பு ’பிஜு ஜனதா தளம் - பாஜக கூட்டணி’ இறுதியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்து, அங்கு பாஜக தனித்து களம் காணுவதாக அறிவித்துள்ளது.

மேலும், பஞ்சாப்பில் சிரோன்மணி அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், அதுவும் தோல்வியில் முடிந்தது. இப்படியாக, மாநிலத்திலும் கூட்டணி அமைப்பதில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது.

தொடர்ந்து 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ’ஜூன் 4... 400 இடங்களுக்கு மேல்’ என்னும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது பாஜக. ஆனால், இப்படி பல மாநிலங்களில் வேட்பாளர்கள் விலகுவதும், கூட்டணி முறிவுகளும், பாஜகவே போட்டியில்லை என அறிவிப்பதும் பாஜக பலவீனம் அடைவதை உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, இதனை சரிகட்டி பாஜக தன் இலக்கை எட்டுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x