Published : 26 Mar 2024 05:20 PM
Last Updated : 26 Mar 2024 05:20 PM

“பெண்களுக்கும் பெண் தெய்வத்துக்கும் அவமதிப்பு” - மம்தா குறித்த பாஜக எம்.பி பேச்சுக்கு திரிணமூல் பதிலடி

திலீப் கோஷ், மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து பாஜக எம்.பி. திலீப் கோஷின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி, “மாநிலத்தின் முன்னாள் பாஜக தலைவரும், கட்சியும் அவரை தொகுதியில் இருந்து வெளியேற்றிய விரக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்” என்று சாடியுள்ளது.

முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மீது தனிப்பட்ட தாக்குதல் தொடுத்திருந்த பாஜக எம்.பி.திலீப் கோஷ், "தீதி (மம்தா) கோவாவுக்குச் செல்லும்போது நான் கோவாவின் மகள் என்று கூறுகிறார். திரிபுரா செல்லும் போது நான் திரிபுராவின் மகள் என்று சொல்கிறார். முதலில் அவரின் தந்தை யார் என்பதை அவர் முடிவு செய்ய வேண்டும். எல்லோருக்கும் மகளாக இருப்பது நல்லதில்லை" என்று பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பாஜக எம்.பி.யின் சர்ச்சைக்குரிய இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி, “திலீப் கோஷ் அரசியல் தலைவர் என்ற பெயரிலான ஓர் அவமானம்” என்று சாடியுள்ளது. இது குறித்த டிஎம்சியின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "துர்கா மாதாவின் பரம்பரைக்கு சவால் விடுவது முதல் தற்போது மம்தா பானர்ஜியின் பரம்பரையை கேள்வி கேட்பது வரை அவர் (திலீப் கோஷ்) இழிநிலையின் அடியாழத்திலேயே இருக்கிறார்.

இதன்மூலம் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. மேற்கு வங்கத்தின் பெண்கள் மீது திலீப் கோஷ் அவமரியாதையே கொண்டுள்ளார். அது இந்து மதத்தின் தெய்வமாக இருந்தாலும் சரி, நாட்டின் ஒரே பெண் முதல்வராக இருந்தாலும் சரி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு துர்கா மாதா பற்றி பேசிய இருந்த பாஜக எம்.பி., "கடவுள் ராமர் ஒரு பேரரசர். சிலர் அவரை அவதாரம் என்று கருதுகின்றனர். ராமரின் முன்னோர்கள் பற்றி நமக்கு நன்றாக தெரியும். அதேபோல துர்காவின் முன்னோர்கள் பற்றி நமக்கு தெரியுமா?" என்று கேட்டிருந்தார்.

மம்தா பானர்ஜி பற்றிய திலீப்பின் அவதூறு பற்றி கருத்து தெரிவித்துள்ள திரிணமூல் கட்சியைச் சேர்ந்த குணால் கோஷ், “இதுபோன்ற அவமரியாதையான வார்த்தைகளை பாஜக தலைவர்களால் மட்டுமே கூற முடியும்” என்று விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “உங்கள் கட்சி மேதினிபூரில் இருந்து உங்களை வெளியேற்றி விட்டது. அங்கு பேச முடியாத நீங்கள், மம்தா பானர்ஜியை பற்றி அவதூறாக பேசி உங்களுடையை ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறீர்கள்.

மம்தா பானர்ஜி ஏழு முறை எம்.பி.யாக இருந்தவர். நான்கு முறை மத்திய அமைச்சராக இருந்தவர். மூன்றாவது முறையாக முதல்வராக இருக்கும் அவர் நாடு முழுவதும் பிரபலமானவர். அவர் இந்தியாவின் மகள்" என்று கூறியுள்ளர். மேலும், உங்களுடைய கட்சி உங்களை "வெளியேறு திலீப் வெளியேறு" என்று கூறியுள்ளது என்று பகடி செய்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மாநிலத்தின் அமைச்சருமான ஷாசி பஞ்சா கூறுகையில், "பெண்களை அவமரியாதையாக பேசுவது பாஜகவின் இயல்பு. இதற்கெல்லாம் மேற்கு வங்கத்தின் பெண்கள் பதிலடி கொடுப்பாளர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திலீப் கோஷை எதிர்த்து பர்தாமன் துர்காபூரில் போட்டியிடும் திரிணமூல் கட்சி வேட்பாளரும், முன்னாள் கிரிக்கெட்டருமான கீர்த்தி ஆசாத், "ஜமீந்தார் மனநிலை இது. அவர்கள் பெண்களை மதிப்பதே கிடையாது என்பதால், அவர்கள் நினைத்தபடி பே்சுவார்கள். அவர் தன்னிலை இழந்து விட்டார். அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டியவர். இவரைப் போன்றவர் சமூகத்தில் இருக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மேதினிபூர் தொகுதியில் வெற்றி பெற்ற திலீப் கோஷ், வரும் 2024-ம் பொதுத் தேர்தலில் பர்தாமன் துர்காபூரில் போட்டியிட இருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x