Published : 26 Mar 2024 08:16 AM
Last Updated : 26 Mar 2024 08:16 AM
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்ததைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி ஹோலி பண்டிகை கொண்டாடவில்லை என்று டெல்லிகல்வித் துறை அமைச்சர் ஆதிஷி அறிவித்தார்.
மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பானவிசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குக் கடந்த நவம்பர் முதல்8 முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. இதனை நிராகரித்து வந்தகேஜ்ரிவாலை மார்ச் 21-ம் தேதிஅமலாக்கத்துறை கைது செய்தது. இதனை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது பற்றி டெல்லி கல்வி அமைச்சர் ஆதிஷி தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது: ஹோலி வெறும் பண்டிகை அல்ல. தீமையை நன்மை வென்றதற்கான அடையாளம் அது.கொடுமையை நீதி அகற்றியதற்கான சின்னம் அது. ஆம் ஆத்மிகட்சியின் ஒவ்வொரு தலைவரும் இத்தகைய தீமையை, கொடுமையை, அநீதியை எதிர்த்து இரவும் பகலுமாக போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தமுறை ஆம் ஆத்மி கட்சியினர் வண்ணங்களோடு விளையாடப்போவ தில்லை, ஹோலி பண்டிகையைக் கொண்டாடப்போவதில்லை என்று தீர்மானித்திருக்கிறோம்.
ஏனெனில் குரூர கொடுங் கோல் ஆட்சியாளர், நமது பேரன்புக்குரிய டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சிறை யில் அடைத்து விட்டார். இன்றைய தேதியில் நமது தேசத்திலிருந்து ஜனநாயகத்தை விரட்டியடிக்கும் அத்தனை காரியங்களையும் அவர்கள் செய்து முடித்துவிட்டார்கள். இந்த ஹோலி தினத்தன்று கொடூரத்தையும் தீமையையும் விரட்டி அடிக்கஎங்களுடன் கரம் கோக்க உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் வைக்கிறேன்.
இதுவெறும் ஆம் ஆத்மிகட்சிக்கான போராட்டம் மட்டுமல்ல ஒட்டுமொத்த டெல்லிக்கானது. அதிலும் தேசத்தின் ஜனநாயகத்தை மீட்கும் போராட்டமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுதவிர, கேஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகள் மகா பேரணி என்ற பெயரில் கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் மார்ச் 31-ம் தேதி நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT