Published : 25 Mar 2024 04:58 AM
Last Updated : 25 Mar 2024 04:58 AM

‘இண்டியா’ கூட்டணி 272 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும்: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணி 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

பிடிஐ நிறுவனம் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நிதியில் ரூ.4 ஆயிரம் கோடியானது, ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களுடன் நேரடி தொடர்புடையதாக உள்ளன. உள்கட்டமைப்பு ஒப்பந்தங்கள் முடிந்த பிறகு பாஜக தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றுள்ளது. மேலும், மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுத்த பிறகு, அந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நிதி அளித்துள்ளன. சிபிஐ, அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்ட 30 நிறுவனங்கள் மூலம்பாஜகவுக்கு ரூ.330 கோடி நன்கொடை கிடைத்துள்ளதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

ஹேமந்த் சோரன், அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரது பெயர்களை பயன்படுத்தி, ஊழலுக்கு எதிராக போராடுவதாக பிரதமர் மோடி வெற்று கோஷமிடுகிறார். ஆனால், பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றது பிரதிபலன் நடவடிக்கைக்கு மிக சிறந்த உதாரணம்.

காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறுஎதிர்க்கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடிக்கணக்கில் நன்கொடை பெற்றுள்ளன. ஆனால்,எங்களிடம் விசாரணை அமைப்புகள் இல்லை. நாங்கள் எந்த நிறுவனங்களுக்கும் ஒப்பந்தம் வழங்கவில்லை.

கடந்த டிசம்பர் 19-ம் தேதி வரை ‘இண்டியா’கூட்டணியில் 28 கட்சிகள் ஒன்றாக இருந்தன. நிதிஷ்குமார் திடீரென பல்டி அடித்தார். மம்தா பானர்ஜி, மம்தா பானர்ஜியாக இருக்க முடிவு செய்தார். இந்த 2 விஷயங்கள்தான் இண்டியா கூட்டணியில் நடந்தது. நிதிஷ்குமார் இல்லை என்பதற்காக, கூட்டணி அழிந்துவிடாது.

சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்அணி), திமுக, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளுடன் இண்டியா கூட்டணி உறுதியாகவே உள்ளது. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் எங்கள் கூட்டணி இறுதி செய்யப்பட உள்ளது. அசாமில் 11 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மம்தா பானர்ஜி எங்களுடன் தொகுதி பங்கீடு செய்யவில்லையே தவிர,இண்டியா கூட்டணியின் ஓர் அங்கமாகத்தான் உள்ளார். இண்டியா கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் ஓர் அங்கம் என்றுதான் மம்தா கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ள இண்டியா கூட்டணி நிச்சயம் 272 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும்.

காங்கிரஸ் கட்சியின் விசுவாசமான வீரன் என்று ராகுல் காந்திகூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு எங்கு போட்டியிட சொன்னாலும், போட்டியிடுவார். அவரது அரசியல் வித்தியாசமானது. கட்சிக்கு புதிய சக்தி,புத்துயிர் அளிப்பதில் வெற்றிகரமாக செயல்படுகிறார். கட்சியை நன்றாக வழிநடத்துகிறார்.

தேசிய ஒற்றுமை யாத்திரையை வெற்றிகரமாக மேற்கொண்டார். நாட்டில் வேறு யாரும் இதுபோல செய்தது இல்லை. இதில் மம்தா பானர்ஜி தவிர எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். யாத்திரைக்கு பிறகு, ராகுல் காந்தி மீதான பார்வை மாற்றம் அடைந்துள்ளது. நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x