Published : 24 Mar 2024 02:51 PM
Last Updated : 24 Mar 2024 02:51 PM

சிவ சேனா கூட்டணியை பிரகாஷ் அம்பேத்கர் கைவிட்டது துரதிருஷ்டவசமானது: சஞ்சய் ராவத்

சஞ்சய் ராவத் | கோப்புப்படம்

மும்பை: சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) கூட்டணியை பிரகாஷ் அம்பேத்கர் கைவிட்டது துரதிருஷ்டவசமானது என்று சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

வன்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், சிவசேனாவுடன் இனி கூட்டணி இல்லை என்று சனிக்கிழமை கூறியதை அடுத்து சஞ்சய் ராவத் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், " உத்தவ் தாக்கரேவும் பிரகாஷ் அம்பேத்கரும் ஓராண்டுக்கு முன்பு கூட்டணியை அறிவித்த போது மக்களவைத் தேர்தல் பற்றிய பேச்சு இல்லை. இந்தக் கூட்டணி அடிப்படையில், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிணைந்து செயல்பட்டது. நல்ல நோக்கத்துடன் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த முடிவினை அறிவிப்பதற்கு முன்பு பிரகாஷ் அம்பேத்கர் தாக்கரேவுடன் விவாதித்திருக்க வேண்டும்.

இது ஒரு தலைபட்சமான, துரதிருஷ்டவசமான முடிவு. அம்பேத்கரின் பேரனான விபிஏ தலைவர் தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், "மகா விகாஷ் அகாடி கூட்டணியில் பிரகாஷ் அம்பேத்கருக்கு வழங்குவதாகச் சொன்ன மூன்று தொகுதிகள் இன்னமும் அப்படியே இருக்கின்றன" என்றார்.

உத்தவ் தாக்கரே அணி சிவசேனா மற்றும் விபிஏ கூட்டணி கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் பிரகாஷ் அம்பேத்கரின் மகா விகாஷ் கூட்டணியில் உள்ளதாகக் கருதப்பட்டது. என்றாலும் இந்தக் கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நிறைவடையவில்லை.

இதனிடையே, தனது அடுத்த நகர்வினை மார்ச் 26ம் தேதி அறிவிக்க இருப்பதாக பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலுக்கான விபிஏ மற்றும் மகா விகாஷ் அகாடிக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை குறித்து நேரடியாக கருத்து கூற அவர் மறுத்துவிட்டார். மகா விகாஷ் அகாடி கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான உள் சண்டை நிறைவடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் அம்பேத்கர் தனது கட்சி மீதான சிவசேனா மற்றும் என்சிபி - யின் நியாயமற்ற அணுகுமுறை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். காங்கிரஸுக்கு மக்களவைத் தேர்தலில் ஏழு இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு அவர் ஆதரவு தெரிவித்திருந்தார். எம்விஏவியின் காங்கிரஸ் கட்சிக்கான மக்களவைத் தொகுதி முன்மொழிவு ஒரு நல்லெண்ணத்துக்கான சமிக்ஞை மட்டும் இல்லை. இது ஒரு சாத்தியமான கூட்டணிக்கான நட்புக் கரத்தின் நீட்சி என்று தெரிவித்திருந்தார்.

மகாராஷ்டிரா மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்.19ம் தேதி தொடங்கி மே 20ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்க இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x