Published : 23 Mar 2024 08:44 PM
Last Updated : 23 Mar 2024 08:44 PM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், மேற்கு வங்கத்தில் ஹூக்ளி தொகுதியில் பிரபல நடிகை மற்றும் தொகுப்பாளர் ரச்சனா பானர்ஜி களம் காண்கிறார். பெங்காலி டிவி சேனலின் ‘திதி நம்பர் 1’ என்ற பிரபல கேம் ஷோ ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தொகுப்பாளராக இருக்கிறார் ரச்சனா பானர்ஜி. ஒரு தொலைக்காட்சி ஸ்டுடியோவுக்கும், மக்களுடன் மக்களாக போராடும் தேர்தல் களத்துக்கும் இடையே கடலளவு வித்தியாசம் உள்ளது. இங்கு ரீடேக்குகள் எதுவும் இல்லை என்பது ரச்சனா பானர்ஜிக்கு தெரியும். இருப்பினும் அவரின் புகழ், தேர்தல் அரசியலில் எடுபடுமா?
மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்த நகர்வு, ‘இண்டியா’ கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இத்தகைய சூழலில் தான், அக்கட்சி மேற்கு வங்க மாநிலத்தின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி மஹுவா மொய்த்ராவுக்கு மீண்டும் கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார். ஹூக்ளி தொகுதியில் போட்டியிடும் ரச்சனா பானர்ஜி தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். தற்போது அவரை ஏன் மம்தா பானர்ஜி இந்த தொகுதியில் களமிறக்கினார் என்பது தொடர்பான கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
‘திதி நம்பர் 1’ ரியாலிட்டி ஷோ: சில நாட்களுக்கு முன்பு மம்தா பானர்ஜி ‘திதி நம்பர் 1’ ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. மம்தா அரசியலில் நன்கு அறியப்பட்ட முகமாக இருந்தாலும், ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. மம்தாவுடனான ரச்சனாவின் சந்திப்பு, முன்னாள் அரசியல் பிரவேசம் பற்றியதாக ஆரம்பத்தில் ஊகிக்கப்பட்டது.
ஆனால், கேம் ஷோவில் மம்தா பங்கேற்பது குறித்து ஆலோசித்ததாகத் தெரிகிறது. ரச்சனா பானர்ஜி மேற்கு வங்க முதல்வரை தனது நிகழ்ச்சிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அது தொடர்பான புகைப் படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இங்கே அவர்களின் கலந்துரையாடல் தேர்தல் களத்துக்கு மடை மாறியுள்ளதாக தெரிகிறது.
யார் இந்த ரச்சனா பானர்ஜி? - ரச்சனா பானர்ஜி 1974-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ளகொல்கத்தாவில் பிறந்தார். 49 வயதான ரச்சனா பானர்ஜி 1994-ஆம் ஆண்டு ‘மிஸ் கொல்கத்தா’ பட்டம் வென்றபோது முதன்முதலில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். பின்னர் அவர் பெங்காலி, ஒடியா, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உட்பட பல மொழிகளில் படங்களில் நடித்தார். தமிழில் ‘பூவரசன்’, ‘டாடா பிர்லா’, ‘வாய்மையே வெல்லும்’ படங்களில் நடத்தவர். அதன்பிறகு பெங்காலி பொழுதுபோக்கு டிவி சேனலின் ‘திதி நம்பர் 1’ என்ற பிரபல கேம் ஷோவில் தொகுப்பாளராக அறிமுகமானார்.
'திதி நம்பர் 1' 2010-இல் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தற்போது அதன் ஒன்பதாவது சீசனில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் என்ன ஆச்சர்யமென்றால் அவர் முதல் சீசனில் அறிமுகமாகவில்லை. இரண்டாவது சீசனில்தான் அவர் தொகுப்பாளாராக அறிமுகமானார். அப்போது இந்த ஷோ நன்கு பிரபலமடைய ஆரம்பித்தது. குறிப்பாக, பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், ஒரு நல்ல படம் கொடுக்க இயலாத பிரபலத்தை, இந்த டிவி கேம் ஷோ அவருக்கு அளித்துள்ளது.
இந்த ஷோவில் பெண் பங்கேற்பாளர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்தப் போராட்டங்களை விவரிக்கிறார்கள், அவர்களின் மகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இதன் விளைவாக இந்த ஷோ மிக நீண்ட காலம் இயங்கி வருகிறது. ரச்சனா பானர்ஜியின் எளிமையான ஸ்டைல், சிரிப்பு மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக பாவனைகள் அனைத்தும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொடுத்தது.
சந்தேஷ்காலி விவகாரம், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள், சிஏஏ சட்டம் என மேற்கு வங்கத்தில் அரசியல் மோதலுக்குப் பஞ்சமில்லை. இருப்பினும், ஹூக்ளி மக்களவைத் தொகுதியில் முன்னாள் நடிகையும், பாஜகவின் சிட்டிங் எம்பியுமான லாக்கெட் சட்டர்ஜியை எதிர்த்து ரச்சனா பானர்ஜி போட்டியிடுகிறார்.
சமீபத்திய பேட்டியளித்த ரச்சனா பானர்ஜி, “மக்களவைத் தேர்தலுக்காக நான் பிரசாரம் செய்வேன். ஆனால், நான் இரவில் வந்து படப்பிடிப்பு நடத்துவேன்” என்றார். மேற்கு வங்கத்தில் வங்காளப் பெண்களை தினமும் ஒரு மணி நேரம் தொலைக்காட்சித் திரையில் கவர்ந்து இழுந்த முகம், வாக்குகளாக வலுவடையுமா என்பதை தேர்தல் களமும், மக்களும் தான் முடிவு செய்வார்கள்.
> முந்தைய அத்தியாயம்: ராகுலுக்கு டஃப், முக்கிய பெண் ஆளுமை... யார் இந்த ஆனி ராஜா? | 2024 தேர்தல் கள புதுமுகம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT