Published : 23 Mar 2024 03:54 PM
Last Updated : 23 Mar 2024 03:54 PM

இமாச்சலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங். எம்எல்ஏக்கள் 6 பேரும் பாஜகவில் ஐக்கியம்

பாஜகவில் இணைந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர்

புதுடெல்லி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

சுதிர் ஷர்மா, இந்தர் தத் லக்ஷன்பால், ரவி தாக்கூர், சேதன்யா ஷர்மா ராஜிந்தர் ராணா, தேவிந்தர் குமார் புட்டோ ஆகிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 6 பேர் இன்று பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் 6 பேரும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

அப்போது பேசிய அனுராக் தாக்குர், “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 6 பேரின் வரவால், பாஜக மேலும் வலிமை பெறும். இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் அரசு, தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால், மக்களின் பரவலான அதிருப்தியை அக்கட்சி பெற்றுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலின்போது இவர்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த சம்பவம், மாநிலத்தில் காங்கிரஸ் மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடு” என தெரிவித்தார்.

பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலின்போது, பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்து பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைத்ததை அடுத்து, இமாச்சலப் பிரதேச சுயேட்சை எம்எல்ஏக்கள் மூன்று பேர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேருடன் டெல்லியில் தங்கி இருந்தனர்.

அப்போது, இமாச்சலப் பிரதேச பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், 6 எம்எல்ஏக்களும் அவைக்கு வர காங்கிரஸ் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்தது. எனினும், அவர்கள் வராததால், அவர்கள் அனைவரையும் காங்கிரஸ் கட்சி தகுதி நீக்கம் செய்தது.

இதன் காரணமாக, இந்த 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து ஜூன் 1-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இவர்கள் 6 பேரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

இதனிடையே, சுயேட்சை எம்எல்ஏக்கள் ஹோஷியார் சிங், ஆஷிஷ் ஷர்மா, கே.எல். தாக்கூர் ஆகிய மூவரும் ஷிம்லாவில் சட்டப்பேரவை செயலாளர் யஷ்பால் ஷர்மாவை சந்தித்து, ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர்.

“நாங்கள் மூவரும் பாஜகவில் இணைய இருக்கிறோம். நாங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியை ஆதரித்தோம். ஆனால், அதற்கான மரியாதையை அக்கட்சி கொடுக்கவில்லை. தவிர, தொகுதி பணிகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கிறோம். எனவே, மிகுந்த தெளிவோடு, பாஜகவில் இணையும் முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்” என ஹோஷியார சிங் தெரிவித்துள்ளார்.

9 சட்டப்பேரவை உறுப்பினர்களின் விலகலை அடுத்து சட்டப்பேரவையின் பலம் தற்போது 68-ல் இருந்து 59 ஆக குறைந்துள்ளது. இதில், ஆளும் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் உள்பட 34 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. பாஜக, 25 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. எனவே, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x