Published : 23 Mar 2024 02:26 PM
Last Updated : 23 Mar 2024 02:26 PM

குஜராத்: பாஜக வேட்பாளர்கள் இருவர் போட்டியில் இருந்து விலகல்

ரஞ்ஜன்பென் பட் (இடது), பிகாஜி தாக்கூர் (வலது)

புதுடெல்லி: குஜராத் பாஜக வேட்பாளர்கள் இருவர் மக்களவைத் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

குஜராத்தின் வடோதரா மக்களவைத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரான ரஞ்ஜன்பென் பட்டுக்கு அதே தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு முறை இத்தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் அவருக்கு மூன்றாவது முறையாக பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு தொகுதியில் உள்ள பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரஞ்ஜன்பென் பட்டின் பெயர், பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து, அவருக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சமூக ஊடகங்களிலும் அவருக்கு எதிராக தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளனர்.

உச்சபட்சமாக வடோதரா மாவட்டத்தின் சவாலி பகுதியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் கேட்டன் இனாம்தார், ரஞ்ஜன்பென் பட்டின் தேர்வை எதிர்த்து ராஜினாமா செய்துள்ளார். எனினும், கட்சியின் மாநில தலைவர் சி.ஆர். பாட்டில் உடனான சந்திப்புக்குப் பிறகு அவர் ராஜினாமாவை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில், போட்டியில் இருந்து விலகுவதாக ரஞ்ஜன்பென் பட் அறிவித்திருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டயில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், சபர்காந்தா தொகுதியின் பாஜக வேட்பாளரான பிகாஜி தாக்கூரும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பழங்குடியினத்தைச் சேர்ந்தவரான அவர், சபர்காந்தா தொகுதியில் அதிகம் உள்ள தாக்கூர் சமூக மக்களிடையே செல்வாக்கைப் பெறும் நோக்கில் தனது சாதியை மாற்றிக்கொண்டதாக பாஜகவினர் அவர்மீது குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ரஞ்ஜன்பென் பட் மற்றும் பிகாஜி தாக்கூர் ஆகிய இருவரும் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தெரிவித்துவிட்ட போதிலும், பாஜக தரப்பில் இதுவரை எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x