Published : 23 Mar 2024 12:13 PM
Last Updated : 23 Mar 2024 12:13 PM

மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு: லோக்பால் ஆணைய உத்தரவால் நடவடிக்கை

கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கில் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க சிபிஐக்கு லோக்பால் ஆணையம் கடந்த 15-ம் தேதி உத்தரவிட்ட நிலையில், இந்த சோதனை நடத்தப்படுகிறது. கடந்த 15-ம் தேதி இந்த வழக்கின் விசாரணையின்போது லோக்பால் பிரிவு 20(3)(ஏ)-ன் கீழ் குற்றச்சாட்டுகளை விசாரித்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு ஆணையம் உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.

“மஹுவா மொய்த்ரா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால், குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான சான்றுகள் உள்ளன. எனவே அவர் வகித்த பதவியின் அடிப்படையில் பார்த்தால், குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகவே, உண்மையைக் கண்டறிய ஆழமான விசாரணை தேவை. ஒவ்வொரு மாதமும் விசாரணையின் நிலை குறித்து அவ்வப்போது சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று லோக்பால் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.

இந்த உத்தரவின் தொடர்ச்சியாக கொல்கத்தாவில் உள்ள மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பின்னணி என்ன? - மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா. இவர் மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்த கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா ரூ.2 கோடி வரை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபாயில் வசிக்கும் ஹிராநந்தானி பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி, மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. நெறிமுறைக் குழு விசாரணையின்போது மஹுவா பாதியிலேயே வெளியேறினார். மேலும், நெறிமுறைக் குழு தலைவர் அநாகரிகமான கேள்விகளை எழுப்புவதாக குற்றம் சாட்டினார். ஆனால், உண்மையான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே மஹுவா இந்த நாடகத்தை ஆடியதாகவும், இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவருக்கு துணை போனதாகவும் நெறிமுறைக் குழு தலைவர் குற்றம் சாட்டியிருந்தார்.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பாஜக எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை கடந்த ஆண்டு நவ.9-ஆம் தேதி வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யக் கூறும் மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரை கடந்த ஆண்டு டிச 8ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அவையில் கடுமையான அமளி நிலவியது. மஹுவா தனது தரப்பு கருத்தை முன்வைக்க விரும்பினார். ஆனால், அவருக்கு அவையில் பேச அனுமதி அளிக்கப்படவில்லை. மஹுவாவுக்கு அவையில் பேச அனுமதி அளிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர். கடும் அமளிக்கு மத்தியில் மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x