Published : 23 Mar 2024 06:06 AM
Last Updated : 23 Mar 2024 06:06 AM

இஸ்ரோவின் ‘புஷ்பக்' விண்கல சோதனை வெற்றி

கர்நாடகாவின் சித்ரதுர்காவில் துல்லியமாக ஓடுபாதையில் தரையிறங்கிய புஷ்பக் விண்கலம்.

புதுடெல்லி: இஸ்ரோவின் 'புஷ்பக்' விண்கலம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆர்எல்வி (மறுபயன்பாடு விண்கலம்) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கடந்த 1981-ல் கொலம்பியா என்ற விண்கலத்தை (ஸ்பேஸ் ஷட்டில்) உருவாக்கியது. அடுத்தடுத்து பல்வேறு பெயர்களில் 5 விண்கலங்கள் தயாரிக்கப்பட்டன. அடிக்கடி ஏற்பட்ட விபத்துகள் காரணமாக 2011-ம் ஆண்டில் நாசாவின் 6 விண்கலங்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்' 2010-ம் ஆண்டில் ஆர்எல்வி தொழில்நுட்பத்தில் பால்கன்-9 விண்கலத்தை தயாரித்தது. இந்த விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் ‘ஸ்பேஸ் கேப்சூல்' தொழில்நுட்பத்தில் விண்வெளிக்கு விண்கலங்களை அனுப்புகின்றன. ரஷ்யாவின் பிரபலமான சோயூஸ்விண்கலம் ‘ஸ்பேஸ் கேப்சூல்'தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது ஆகும்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆர்எல்வி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விண்கலம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. இதன் பலனாக 2016-ம் ஆண்டில் ஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் முதல் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஹெக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பியது.

இதன்பிறகு கடந்த 2023-ம் ஆண்டில் இஸ்ரோ தயாரித்த புதிய விண்கலம் ஹெலிகாப்டர் மூலம் வானில் பறக்க விடப்பட்டது. இந்த விண்கலம் பத்திரமாக ஓடுபாதையில் தரையிறங்கியது.

இதைத் தொடர்ந்து இஸ்ரோ தயாரித்த 'புஷ்பக்' என்ற புதிய விண்கலம் நேற்று ஹெலிகாப்டர் மூலம் வானில் பறக்கவிடப்பட்டது. இந்த விண்கலம் கர்நாடகாவின்சித்ரதுர்காவில் அமைக்கப்பட்டி ருந்த ஓடுபாதையில் பத்திரமாக தரையிறங்கியது.

இதுகுறித்து இஸ்ரோ வட்டாரங்கள் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு சோதனை செய்த விண்கலத்தைவிட தற்போதைய விண்கலம் 1.6 மடங்கு பெரியது. இதன் நீளம் 6.5 மீட்டர், அகலம் 3.6 மீட்டர் ஆகும். எதிர்காலத்தில் இஸ்ரோவின் விண்கலம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி பத்திரமாக பூமிக்கு அழைத்து வர முடியும்’’ என்று தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x