Published : 22 Mar 2024 08:57 PM
Last Updated : 22 Mar 2024 08:57 PM
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலிடம் மார்ச் 28-ம் தேதி வரை காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேற்று (மார்ச் 21) கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ முன்வைத்த வாதங்கள்: ‘மதுபான கொள்கை ஊழல் வழக்கின் முக்கியமானவர் கேஜ்ரிவால். இந்த ஊழலுக்கு விஜய் நாயர் என்பவர் இடைத்தரகராக இருந்து செயல்பட்டுள்ளார்.
கேஜ்ரிவாலின் வீட்டுக்கு அருகே தங்கி இருந்து அவருக்கு நெருக்கமாக விஜய் நாயர் செயல்பட்டுள்ளார். தங்களது மதுபான கொள்கை மூலம் பலனடையும் மதுபான வியாபாரிகளிடம் இருந்து ரூ.100 கோடி பெற்றுத் தருமான கேஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு பெறப்பட்ட பணம், பஞ்சாப் மற்றும் கோவா தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊழல் வழக்கில் ஆம் ஆத்மிக்கு ரூ. 100 கோடி வழங்கப்பட்டதில் தொடர்புடைய பாரத் ராஷ்ட்ர சமிதி எம்எல்சி கவிதா ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கேஜ்ரிவால் சந்தித்து, மதுபான கொள்கை விஷயத்தில் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஊழலின் மதிப்பு ரூ.100 கோடி மட்டுமல்ல. லஞ்சம் கொடுத்தவர்கள் அடைந்த பலனும் இதில் சேர்க்கப்பட வேண்டும். மதுபான வியாபாரிகள் அனைவருமே பணம் கொடுத்திருக்கிறார்கள்.
தெற்கு குழுமத்திடம் இருந்து பெறப்பட்ட ரூ.45 கோடி லஞ்சப் பணம் 2021-22-ல் நடந்த கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிகப் பெரிய அளவில் பணம் கை மாறி இருக்கிறது. தாங்கள் பணமாக பெற்றதாக கோவா சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே, அரவிந்த் கேஜ்ரிவால் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, அரவிந்த் கேஜ்ரிவாலிடம் மார்ச் 28-ம் தேதி வரை காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனிடையே, அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அளவிலான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனை முன்னிட்டு டெல்லியில் போலீஸார் பாதுகாப்பை அதிகப்படுத்தியிருந்தனர். டெல்லி ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டிருந்தது. ஆம் ஆத்மி கட்சியினரின் போராட்டம் காரணமாக பல சாலைகளை போலீஸார் மூடியதால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கைது பின்னணி: டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறைவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை முதல்வர் கேஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை.
இந்த சம்மன்களை எதிர்த்து கேஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள கேஜ்ரிவாலின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 9.20 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT