Published : 22 Mar 2024 06:39 PM
Last Updated : 22 Mar 2024 06:39 PM

கைகூடாத பிஜு ஜனதா தளம் கூட்டணி: ஒடிசாவில் பாஜக தனித்துப் போட்டி!

பிரதமர் மோடியுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் | கோப்புப் படம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் பாஜக தனித்தே போட்டியிட இருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமால் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிஜு ஜனதா தளம் உடனான கூட்டணி கைகூடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் வளர்ந்த இந்தியா மற்றும் வளர்ந்த ஒடிசாவை உருவாக்க, ஒடிசாவின் 21 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 147 சட்டமன்றத் தொகுதிகளில் தனித்து போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளது. ஒடிசாவின் நான்கரை கோடி மக்களின் விருப்பங்கள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் பாஜகவும் மாநிலத்தின் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளமும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என கடந்த 2 மாதங்களாக யூகங்கள் வெளியாகி வந்தன. கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு முறை ஒடிசாவுக்கு வந்தார். இரண்டு முறையும், அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியோடு, பிஜு ஜனதா தள தலைவரும் முதல்வருமான நவீன் பட்நாயக் கலந்து கொண்டார்.

இந்தப் பயணங்களின்போது தேர்தல் பிரச்சாரங்களிலும் மோடி ஈடுபட்டார். அப்போது, அவர் பிஜு ஜனதா தள அரசுக்கு எதிராகப் பேசுவதை கவனமாக தவிர்த்தார். இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க இருப்பதற்கான சமிக்ஞையாக இது பார்க்கப்பட்டது. இந்நிலையில், கூட்டணி குறித்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மன்மோகன் சமாலின் எக்ஸ் பதிவு அமைந்துள்ளது.

அரசியல் பின்புலம்: ஒடிசாவில் கடந்த 1997-ம் ஆண்டு டிசம்பரில் பிஜு ஜனதா தளம் கட்சியை நவீன் பட்நாயக் தொடங்கினார். கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஒடிசாவின் முதல்வராக அவர் பதவி வகித்து வருகிறார். வரும் ஏப்ரலில் ஒடிசாவின் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளும் 21 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் 112 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பாஜகவுக்கு 23, காங்கிரஸுக்கு 9 இடங்கள் கிடைத்தன. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்துக்கு 12, பாஜகவுக்கு 8 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த சூழலில்தான் வரும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய பிஜு ஜனதா தளம் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

அதேபோல், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள முதல்வர் நவீன் பட்நாயக்கின் இல்லத்தில் பிஜு ஜனதா தளம், பாஜக மூத்த தலைவர்களிடையே கூட்டணி தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

கடந்த 1998, 1999, 2004 மக்களவைத் தேர்தல்களின்போது பாஜக, பிஜு ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. கடந்த 2000, 2004-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இரு கட்சிகளும் ஓரணியாக போட்டியிட்டன. கடந்த 2009-ம் ஆண்டு மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக கூடுதல் தொகுதிகளை கோரியதால் கூட்டணி உடைந்தது. இதன்பிறகு இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x