Published : 21 Mar 2024 01:34 PM
Last Updated : 21 Mar 2024 01:34 PM

“காங்கிரஸை நிதி ரீதியாக முடக்க பிரதமர் முயற்சி” - சோனியா காந்தி குற்றச்சாட்டு    

சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று (வியாழக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இந்நாள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முக்கியத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சோனியா காந்தி பேசுகையில், “தற்போது நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் விஷயம் மிகவும் தீவிரமானது. அது இந்திய தேசிய காங்கிரஸை மட்டும் பாதிப்பதில்லை, நாட்டின் ஜனநாயகத்தையும் பாதிக்கும். காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்குவதற்கு பிரதமர் மோடியால் திட்டமிடப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் நிதி முடக்கப்பட்டு எங்கள் கணக்குகளில் இருந்து வலுக்கட்டாயமாக பணம் பறிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த சவாலான சூழ்நிலையில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில், எங்களின் தேர்தல் பிரச்சாரத்தை நடத்த எங்களால் முடிந்த அளவில் முயற்சிகளை மேற்கொள்ளுவோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ராகுல் காந்தி பேசுகையில், “இது காங்கிரஸின் மீது நிகழ்த்தப்பட்ட கிரிமினல் தாக்குதல். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவும் இந்த கிரிமினல் தாக்குதலை எங்கள் மீது நிகழ்த்தியுள்ளனர். இந்தியாவில் இன்று ஜனநாயகம் இல்லை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற கருத்தியலே பொய்யாக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற கருத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளது. நாட்டில் எங்களுக்கு 20 சதவீத வாக்குகள் உள்ளன, ஆனால் எங்களால் எந்த தேர்தல் செலவுக்கும் 2 ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை. தேர்தலில் எங்களை முடக்கத் திட்டமிட்டுள்ளனர். எங்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு, இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “இந்தியா அதன் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மாதிரிகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. எந்த ஒரு ஜனநாயகத்துக்கும், அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்புகளுடன் வெளிப்படையான தேர்தலும் மிகவும் அவசியம். அதிகாரத்தில் இரு்ப்பவர்கள் ஊடகத்தின் மீது அதிகாரம் செலுத்துபவராகவும், வருமான வரித் துறை, அமலாக்கத் துறை,தேர்தல் ஆணையம் மற்றும் பிற தன்னாட்சி அமைப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது” எ்ன்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x