Published : 21 Mar 2024 09:37 AM
Last Updated : 21 Mar 2024 09:37 AM
தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை (பிஐஎல்) உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகளின் பதிவை ரத்து செய்யவும், சின்னங்களை முடக்கவும் தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அந்த பொது நல மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலவச வாக்குறுதி தொடர்பான இந்த பொது நல மனுவின் முக்கியத்துவத்தை உணர்ந்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு அதனை பட்டியலிட உத்தரவிட்டதுடன் இந்த விவகாரம் குறித்து வியாழக்கிழமை விவாதிக்கப்படும் என்று தெரிவித்தது.
வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் மற்றும் மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா சார்பில் இந்த பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களை பாதிக்கும் ஜனரஞ்சக உத்திகளுக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த மனு வலியுறுத்தியுள்ளது.
மேலும், இத்தகைய நடைமுறைகள் அரசியலமைப்பை மீறுவதாகவும், தேர்தல் நடைமுறையின் நேர்மையை சீர்குலைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை வெளியிடுவதன் மூலம் வாக்காளர்களை ஏமாற்றி ஜனநாயகத்தின் மாண்பை சிதைக்கும் என்பதை நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக கட்சிகள் இலவச வாக்குறுதிகளை வெளியிடுவது என்பது பொது நிதியின் செலவில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு சமம். ஜனநாயக கொள்கைகளை நிலை நிறுத்தவும், தேர்தலின் புனிதத்தை காப்பதற்கும் நெறிமுறையற்ற இந்த நடைமுறையை தடை செய்வது அவசியம் என்று பொது நல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேர்தலுக்கு முன் பொது நிதியை பயன்படுத்தி தனியார் பொருட்கள் அல்லது சேவைகளை விநியோகிப்பது அரசியலமைப்பின் 14-வது பிரிவு உட்பட பல்வேறு விதிகளை மீறுவதாக உள்ளது என்பதும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது 8 தேசிய கட்சிகளும், 56 மாநில அளவிலான கட்சிகளும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT