Published : 21 Mar 2024 07:17 AM
Last Updated : 21 Mar 2024 07:17 AM
புதுடெல்லி: அரசியல் ஸ்டார்ட்அப்களை தொடங்க சிலர் பல முறை முயற்சிக்கின்றனர் என்று ராகுல் காந்தி பற்றி மறைமுகமாக பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.
மத்திய வர்த்தம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் சார்பில் ‘ஸ்டார்ட்அப் மஹாகும்ப்’ என்ற பெயரில் 3 நாள்கண்காட்சி மற்றும் கருத்தரங்கு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியின் கடைசி நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது:
இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு முன்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்குவதில் தயக்கம் இருந்தது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டன.
இதையடுத்து, இப்போது இந்தியாவின் வளர்ச்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இப்போது ஸ்டார்ட் அப்கள் சமூக கலாச்சாரமாக மாறிவிட்டது. நாட்டில் உள்ள ஸ்டார்ட்அப்களில் 45% பெண்கள் தலைமையில் நடைபெறுகிறது.
எனது தலைமையில் மூன்றாவது முறை ஆட்சி அமைந்தால், உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். அதற்கான பல்வேறு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்திய இளைஞர்களின் திறமையை உலக நாடுகள் நன்கு அறியும். அவர்களின் திறமையை நம்பி, அவர்களின் விருப்பங்களை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளோம். வேலை தேடுபவர்களாக இருப்பதற்கு பதிலாக இளைஞர்கள் இப்போது வேலை வழங்குபவர்களாக மாற ஆர்வமாக உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக, என்னுடைய உரைகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்க ஏஐ பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள யுபிஐ பணப்பரிமாற்ற முறை புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடை பெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது, யுபிஐ முறையை உலக தலைவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்க பலர் முயற்சி செய்கின்றனர். குறிப்பாக சிலருக்கு அரசியல் ஸ்டார்ட்அப்பை பலமுறை தொடங்க வேண்டி உள்ளது. உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நீங்கள் பரிசோதனையாளர். ஒரு முறை தொடங்கியபோது தோல்வி ஏற்பட்டால் அடுத்த முறை புதிய யோசனைகளைக் கொண்டு முயற்சி செய்கிறீர்கள். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் முகமாக தன்னை காட்டிக்கொள்வதற்காகவே அவர் இந்த யாத்திரையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ராகுல் பற்றி மறைமுகமாக இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT