Published : 20 Mar 2024 05:46 PM
Last Updated : 20 Mar 2024 05:46 PM
புதுடெல்லி: “ராகுல் காந்திக்கு நமது பாரம்பரியம் பற்றி தெரியவும் தெரியாது. தெரிந்தாலும் அவர் அதை மதிக்கவும் மாட்டார். பெண் சக்தி பற்றி தெரியாத ராகுல் காந்திக்கு இந்தத் தேர்தலில் அவர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடியுள்ளார். மேலும், தேர்தல் பத்திர நன்கொடை குறித்தும் அவர் புதிய விளக்கம் அளித்துள்ளார்.
தொலைக்காட்சி ஊடகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, “ராகுல் காந்திக்கு இந்த நாட்டின் பாரம்பரியம் தெரியாது. அதை அவருக்கு மதிக்கவும் தெரியாது. ஆண்டாண்டு காலமாக தேசத்தின் பெரிய சக்தியாக தாயின் சக்தி இருக்கிறது. இந்த உலகில் ஒரு தாயின் ஆசியைவிட பெரிய ஆசி எதுவும் இருக்க இயலாது. ஒரு சகோதரியின் நேசத்தைவிட பெரிய இருக்க இயலாது. .
ராகுல் காந்திக்கு அவர் என்ன செய்கிறார் என்றே தெரியாது. இந்த நாட்டின் பெண் சக்தி பிரதமர் மோடிக்கு ஒரு பாறையைப் போல் பக்கபலமாக இருக்கிறார். இந்த நாட்டின் பெண் சக்தி இந்தத் தேர்தலில் அவர்களின் உண்மையான சக்தியை ராகுல் காந்திக்கு உணர்த்துவார்கள்.
காங்கிரஸின் கொள்கை இந்த தேசத்தை வட இந்தியா, தென் இந்தியா என்று இரண்டாகப் பிரிப்பது மட்டுமே. ராகுல் காந்திக்கு அந்தப் பதற்றம் இனி வேண்டாம். பாஜக மிகவும் சக்தி வாய்ந்தது. அதனால் காங்கிரஸால் தேசத்தை பிளவுபடுத்த முடியாது. நாங்கள் இந்த தேசத்தை யாரும் துண்டாட அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
தேர்தல் பத்திரங்கள் பற்றிப் பேசிய அமித் ஷா, “பாஜக ரூ.6,200 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளது என்றால் இண்டியா கூட்டணிக் கட்சிகள் பெற்ற நன்கொடையைக் கூட்டினால் அதுவும் ரூ.6,200 கோடியைத் தொடுகிறது. உண்மையில் அதற்கும் மேலாக அவர்கள் பெற்றுள்ளனர். எங்களுக்கு 303 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 17 மாநிலங்களில் எங்கள் ஆட்சி நடைபெறுகிறது. இண்டி கூட்டணிக் கட்சிகள் எத்தனை மாநிலங்களில் ஆட்சியில் இருக்கின்றன.
இதுவரை அமலாக்கத் துறையால் கையகப்படுத்தப்பட்ட சொத்துகளில் 5 சதவீதம் மட்டுமே அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையோர் சார்ந்தது. எஞ்சியவை கருப்புப் பணம். அது மக்களின் பணம். அப்படியிருந்தும் கூட அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதுதான் இண்டியா கூட்டணியினர் கூக்குரல். ஊழல்வாதி யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொண்டு சிறை செல்ல வேண்டும்.
மம்தாவின் அமைச்சரவையைச் சார்ந்தோரிடமிருந்து ரூ.51 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்கள் வகையறாவில் ரூ.355 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராகுல் பாபா, இந்த தேச மக்களுக்கு இந்தப் பணம் எல்லாம் எங்கே செல்லும் என்று விளக்க முடியுமா?
எதிர்க்கட்சியினருக்கு தேர்தல் வந்துவிட்டால் போதும், மோடியை வசைபாடும் ஆர்வம் அதிகமாகிவிடும். ஆனால் 2001-ஆம் ஆண்டில் இருந்து அவர்கள் எவ்வளவு அதிகமாக மோடியை வசைபாடுகிறார்களோ அவ்வளவு வலிமையாக, அழகாக தாமரை மலர்கிறது. இந்த முறையும் அதுவே நடக்கும்” என்றார்.
முன்னதாக, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி, “நாங்கள் தனியொரு நபரான மோடி அல்லது பாஜகவை எதிர்த்து போராடவில்லை. சக்தியை எதிர்த்து போராடுகிறோம். இந்த சக்தி, வாக்குப்பதிவு இயந்திரம், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் வசம் உள்ளது” என்று பேசியிருந்தார். ஆனால், அவர் சக்தி எனக் குறிப்பிட்டத்தை பெண் சக்தி எனக் கூறி பாஜக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஏற்கெனவே பிரதமர் ராகுலின் ’சக்தி’ கருத்துக்கு பதில் கூறியிருந்த நிலையில் தற்போது அமித் ஷாவும் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...