Published : 20 Mar 2024 11:42 AM
Last Updated : 20 Mar 2024 11:42 AM
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே. இவர் நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே உடனிருந்தார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக - எம்என்எஸ் இடையிலான கூட்டணி தொடர்பாகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து ராஜ் தாக்கரே பிறகு செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை.
என்றாலும் எம்என்எஸ் கட்சியின் மற்றொரு தலைவர் சந்தீப் தேஷ்பாண்டே கூறும்போது, “இந்த சந்திப்பு பற்றிய விவரத்தை விரைவில் உங்களிடம் பகிர்ந்துகொள்வோம். எந்த முடிவாக இருந்தாலும், அது, மராட்டியர்கள், இந்துத்துவா மற்றும் கட்சியின் நலனுக்காகவே இருக்கும்” என்றார்.
மகாராஷ்டிராவில் வரும் தேர்தலில் சரத் பவார், உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் அணியை பாஜக கூட்டணி எதிர்கொள்கிறது. இதில் உத்தவ் தாக்கரேவை எதிர்கொள்ள ராஜ் தாக்கரேவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சிக்கிறது ராஜ் தாக்கரே, சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் அண்ணன் மகன் ஆவார்.
2003-ல் பால் தாக்கரே தனது மகன் உத்தவ் தாக்கரேவை சிவசேனா செயல் தலைவராக நியமித்தார். இதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜ் தாக்கரே கட்சியை விட்டு விலகினார். 2005-ல் எம்என்எஸ் கட்சியை தொடங்கினார். மகாராஷ்டிராவில் குறிப்பிட்ட பகுதிகளில் இவருக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2019 தேர்தலில் சிவசேனாவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இக்கூட்டணி மாநிலத்தில் மொத்தமுள்ள 48 இடங்களில் 40-ல் வெற்றி பெற்றது. சில மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மற்றொரு வெற்றியை இக்கூட்டணி பெற்றது. என்றாலும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் இரு கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து பாஜகவுடனான உறவை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முறித்துக் கொண்டார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் சேர்ந்து புதிய அரசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT