Published : 20 Mar 2024 04:26 AM
Last Updated : 20 Mar 2024 04:26 AM

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை: சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி

பிரதமர் மோடி

சேலம்: தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடுத்த 5 ஆண்டுகள் மிக முக்கியமானது. அதேபோல, ஊழலுக்கு எதிராக நான் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போகும் காலமும் அதுதான் என்று சேலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக அணியில் இடம்பெற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் அன்புமணி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமமுக தலைவர் ஜான் பாண்டியன், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பாரத அன்னை வாழ்க. என் அன்பான தமிழக சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். இந்த புண்ணிய பூமியில் உள்ள கோட்டை மாரியம்மனை வணங்குகிறேன். சேலத்தில் எனக்கும், பாஜகவுக்கும் நீங்கள் அளித்துள்ள பிரம்மாண்டமான வரவேற்பை நாடே பார்த்துக்கொண்டு இருக்கிறது.

தங்கள் வாக்குகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்குதான் அளிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் தீர்மானித்துவிட்டனர். ‘வேண்டும் மோடி, மீண்டும் மோடி’ என்று மக்கள் முடிவெடுத்துவிட்டனர். இந்த ஆதரவை பார்த்து திமுகவுக்கு தூக்கமே போய்விட்டது.

மிகவும் வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகியுள்ளது. இதில் இணைந்துள்ள பாமகவின் தொண்டர்களை வரவேற்கிறேன். பாமக நிறுவனர் ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும்தமிழகத்துக்கு புதிய முன்னேற்றத்தை கொடுக்கும்.

40 ஆண்டுகளுக்கு முன்பு, நான் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றபோது, சேலத்தை சேர்ந்த ரத்னவேல் என்ற யாத்ரீகரை சந்தித்தேன். அவர் மூலம் சேலத்தின் பெருமைகளை ஏற்கெனவே அறிந்திருக்கிறேன். சேலத்தில் நான் கால் வைத்ததும், நாட்டின் நெருக்கடி காலத்திலும் பாஜகவை வளர்ச்சி பெற வைத்த கே.என்.லட்சுமணன், ஆடிட்டர் ரமேஷ்ஆகியோர் நினைவுக்கு வந்தனர்.

இண்டியா கூட்டணியினர், இந்து மதத்தை தொடர்ச்சியாக அவமதித்து வருகின்றனர். அவர்கள் இந்து மதம் தவிர, வேறு எந்த மதத்தையும் தாக்கி பேசுவது இல்லை. இண்டியா கூட்டணிசார்பில் மும்பையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர்களது உண்மையான முகம் மீண்டும் வெளிப்பட்டுவிட்டது.

‘‘இந்து மதத்தினர் நம்பிக்கை வைத்துவழிபட்டு வரும் சக்தியை அழிக்க வேண்டும்’’ என்கின்றனர். தமிழக மக்கள் ஓம் சக்தியாக, மகா மாரியம்மனை வழிபடுகின்றனர். தமிழகத்தில் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, கன்னியாகுமரி அம்மன், சமயபுரம் மாரியம்மன் என சக்தி ஆலயங்கள் உள்ளன. சக்தியை பெண் உருவில் நாம் வணங்குகிறோம். இத்தகு சக்தியை வீழ்த்துவோம் என்று கூறுவதை அனுமதிக்க முடியாது. இந்து தர்மத்தின்வழிபாடான சக்தியை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார்கள்.

பெண்களை இண்டியா கூட்டணி கேவலமாக கருதுகிறது. தமிழகம் அதற்கு சாட்சி. ஜெயலலிதாவை திமுகஎப்படி இழிவுபடுத்தியது. அதுதான் அவர்களது முகம். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்தார்கள். தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக அதிகமான குற்றங்கள் நடக்கின்றன.

திமுகவும், காங்கிரஸும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றது. அதன் ஒரு பக்கம் ஊழல், மறுபக்கம் குடும்ப ஆட்சி. அவர்களது ஆட்சி என்பது 5ஜி தொழில்நுட்பம் கொண்டது. அதாவது, அவர்கள் குடும்பத்தின் 5-வது தலைமுறையும் ஆட்சிக்கு வரும். திமுகவினர் செய்த 2ஜிஊழலால், உலக அரங்கில் இந்தியாதலைகுனிந்து நின்றது. தமிழக வளர்ச்சிக்கு பல லட்சம் கோடிகளை வழங்க வேண்டும் என்று பாஜக ஆர்வமுடன் உள்ளது. ஆனால், அவர்கள் அதை எப்படி கொள்ளையடிக்கலாம் என்றே காத்திருக்கின்றனர்.

அரசியலில் நேர்மை என்றால் அதுகாமராஜர்தான். ஏழை மாணவர்களுக்காக அவர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் மகத்தானது. தேசிய அரசியலில் மிக உயரத்தில் இருந்தவர் ஜி.கே.மூப்பனார். அவர் பிரதமராக வரவும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அவரை வளரவிடாமல் காங்கிரஸ் தடுத்துவிட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணி, நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய இலக்குகளை வைத்துள்ளது. நாட்டில் 20-க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள், டஜன் கணக்கில் மருத்துவக் கல்லூரிகள், ஐஐடிகள் எனநம்பிக்கையுடன் நாடு வளர்ச்சிபெற்று வருகிறது. இதில் தமிழகத்தையும் சேர்த்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம். இந்தியாவில் 2 ராணுவ தளவாட தொழில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. அதில் ஒன்று தமிழகத்தில் அமைகிறது. நாடு முழுவதும் 7 ஜவுளி பூங்கா அமைக்கப்படும் நிலையில், அதில் ஒன்று தமிழகத்தில் அமைகிறது. எஃகு தொழிலுக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் நான் பெருமையடைகிறேன். நானும் சேலத்தில் 5 மாதங்கள் இருந்திருந்தால், தமிழை சிறப்பாக பேச முடிந்திருக்கும். இப்போது, செயற்கை நுண்ணறிவு (ஏஐ)தொழில்நுட்ப உதவியுடன் எக்ஸ் வலைதளத்தில், என் பேச்சை தமிழிலேயே நீங்கள் கேட்கலாம்.

அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது. அது மட்டுமல்ல, ஊழலுக்கு எதிராக நான் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போகும் காலமும் அதுதான். அதனால், தமிழக மக்கள் வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரு புதிய சாதனையை தொடங்கி வைக்க வேண்டும். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அத்தனை பேரையும் தமிழக மக்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x